உந்துருளி விபத்துக்களின் போது உந்துருளிகள் இரண்டாக பிளவடைவது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய கவுன்சில் இதனை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் உந்துருளி விபத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது, இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் சிசிர கொதாகொட எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில், உந்துருளி தயாரிப்பு தொடர்பில் அதன் தரநிலை குறித்து ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் குற்றங்களுக்காக ஆகக் குறைந்த அபாரதத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், அதற்கு உந்துருளி செலுத்துனர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிபத்திரமின்றி வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துதல், அங்கிகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல், தொடரூந்து பாதையில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் போன்ற குற்றங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நேற்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்துதல், வயது குறைந்தோர் வாகனம் செலுத்துதல், இடதுபக்கம் முன்னோக்கி செல்லல் போன்ற குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட அபராத தொகை 2 ஆயிரத்து 500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அனைத்திலங்கை உந்துருளி செலுத்துனர் சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.