உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நிராகரித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் குறித்து ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேகோன் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தல புனரமைப்பு மற்றும் வேறு செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அண்மையில் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்தை அடுத்து இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இதன்போது, அமைச்சர் நாடாளுமன்றில் சமர்பித்த இடைக்கால திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், வெளிவிவகார, கைத்தொழில், உள்விவகார, மீன்பிடி, பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுக்களுக்கான செலவினங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பழைமை வாய்ந்த இரண்டு வீடுகள் ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள கோட்டை ஜனாதிபதி செயலகம் உபயோகப்படுத்தப்படுமானால், நீர், மின்சாரம், சுத்திகரிப்பு பணிகளுக்காக 150 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை செலவிட அரசாங்கத்திற்கு நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக செலவீனம் காரணமாக குறித்த வாசஸ்தலத்தில் வசிப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts