Ad Widget

உதயன் பத்திரிகையின் இயந்திரப் பகுதி எரித்து நாசம்!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை  தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

 

இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் “தூஷண” வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை ஏசியபடி, அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி வேட்டுக்களைத் தீர்த்திருக்கின்றார்.

 

வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி வேட்டுக்களைத் தீர்த்தனர். அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீற்றர் பிஸ்ரல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர். துப்பாக்கிதாரிகள் அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காகித றோல்களைத் தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும்பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியுள்ளனர்.

 

கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி உதயன் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்துக்குள் புகுந்துகொண்ட குழு அங்கிருந்த பணியாளர்களைப் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சியில் உதயன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபரிடம் மேலதிக பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த போதும் இதுவரையில் அதற்குரிய எந்த விதநடவடிக்கைகளையும் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை.என உதயன் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குத் தொடர்புகொண்டபோதும் மேலும் யாழ்.பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு உதயன் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் பொலிஸார் பதிலளிக்கவில்லை என்றும் இதன் பின்னர் கொழும்பு அலுவலகத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன்சிகேராவின் கைத்தொலைபேசிக்கு அறிவித்ததன் பின்னரே பொலிஸார் உதயன் பணிமனைக்கு வருகை தந்து விசாரணைகளைமேற்கொண்டனர் என தெரியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வருகை தந்த பொலிஸார் குறித்த பகுதியை ஆய்வு செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை நடத்த கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வருகை தரவுள்ளதாகவும் அவர்கள் வரும் வரை இயந்திரப்பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அதுவரை இயந்திரப்பகுதி சீல் வைக்கப்பட்டுளளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை யாழ். உதயன் பத்திரிகை அலுவலகத்தின் அச்சுஇயந்திர பிரிவு தாக்கப்பட்டமை தொடர்பில் நடாத்தப்பட்ட விசாரணையில் உதயன் தாக்குதலுக்கு உள் விவகாரமே காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

Related Posts