உதயன் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இரவு எட்டுமணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது.
27 வயதான குணாளன் திலிப் அமுதன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அலுவலகத்தில் தனது கடமைகளை முடித்துவிட்டு வித்தகபுரம் வன்னியசிங்கம் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சையிக்களில் சென்று கொண்டு இருந்த வேளையில சிவப்பு நிற முச்சக்கரவண்டியினால் பின்னால் துரத்திக்கொண்டு வந்த இனம் தெரியாதவர்கள் ஆட்கள் நடமாற்றப்பகுதியில் வைத்து திடீரென மோட்டார் சையிக்கிளை உதைத்து தள்ளியுள்ளார்கள்.
நிலை தடுமாறிய இவர் அருகில் உள்ள சுமார் ஐந்தடி ஆழமான வெள்ளவாய்காலில் மோட்டார் சைக்கிளுடன் வீழந்துள்ளார்.இதனை பயன்படுத்தி அவர்மீது தாக்குதலை தொடுக்கும் முகமாக முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் இறங்க எத்தனித்த நிலையில் பின்னால் கன்ரர் வாகனத்தில் வந்தவர்கள் சம்பவத்தை உணர்ந்து வாகனத்தை நிறுத்தியதும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் தப்பி ஒடியுள்ளார்கள்.
கன்ரர் வாகனத்தில் வந்தவர்கள், காயப்பட்டவரை அவருடைய வீட்டில் கொண்டுசென்று விட்டதுடன் சேதமடைந்த நிலையில் வாய்காலில் கிடந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டு வீட்டில் ஒப்படைத்துள்ளார்கள்.
காயங்களுக்கு உள்ளான திலிப் அமுதன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவித்தனர்.