”உண்மை என்றேனும் ஒரு நாள் வெல்லும்” – மஹிந்த

தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார்.

rajapaksa_mahintha

தனது தங்­காலை – கால்ட்டன் இல்­லத்தில் இருந்­த­வாறு தன் மீதான குற்றச் சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் முகமாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார்.

ஒரு போதும் இல்­லா­த­வாறு தனக்கும் தனது மனைவி, பிள்­ளை­க­ளுக்கும் எதி­ரா­கவும் மிக மோச­மக சேறு பூசும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எந்­த­வித அடிப்­ப­டையும் அற்ற நிலையில் ஊட­கங்கள், இணையம் மற்றும் சமூக இணை­யத்­த­ளங்கள் ஊடா­கவும் இந் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கவலை வெளி­யிட்­டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தின் போதும், அதன் பின்­னரும் எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் எனது அர­சாங்­கத்­துக்கும் எதி­ராக பல்­வேறு குற்றச்சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டன. எவ­ருக்­கேனும் எதி­ராக அவ்­வா­றான குற்றச்சாட்­டுக்கள் இருப்பின் அது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க முறை­மைகள் உள்­ளன. முன்­னெப்­போதும் இல்­லாத இந்த திட்­ட­மிட்ட சேறு பூசும் நட­வ­டிக்கை தொடர்பில் மக்­க­ளுக்கு பதி­ல­ளிக்க விரும்­பு­கின்றேன்.

ஜன­வரி 9 ஆம் திகதி அதி­காலை இரா­ணுவ சதித் திட்டம் ஒன்றின் ஊடாக ஆட்­சியில் தொடர்ந்தும் நான் இருக்க முற்­பட்­ட­தாக எனக்கு எதி­ராக குற்றச் சாட்டு ஒன்று உள்­ளது. எனினும் உண்­மையில் அன்­றைய தினம், ஜனா­தி­பதி தேர்தல் முடி­வுகள் வெளி­யிட்டு முடிக்க பல மணி நேரங்­க­ளுக்கு முன்­ன­ரேயே நான் அப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலைவ­ராக இருந்த ரணில் விக்கி­ர­ம­சிங்­கவை அழைத்து அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­விட்டு அலரி மாளி­கையில் இருந்து வெளி­யே­றினேன். இந் நிலையில் சட்ட மா அதி­பரை அழைத்து நான் அதி­கா­ரத்தில் தொடர முடி­யு­மான சட்ட ஆலோ­ச­னை­களை கோரி­ய­தாக முன் வைக்­கப்­படும் குற்றச் சாட்டு மிகக் கொடூர சிந்­தனை கொண்­ட­வர்­களின் பழி சுமத்தும் நட­வ­டிக்கை என்­பது அவ­தா­னிப்­போ­ருக்கு விளங்கக் கூடி­யதே. இதனை விட இது விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பொலன்­ன­று­வையில் செய்த உரை என்னை வெகு­வாக கவலைக் கொள்ளச் செய்­தது. பத­வியில் இருந்து இளைப்­பா­றிய போதும் எனக்கு நிம்­ம­தி­யாக இருக்கக்கூடிய சூழல் ஒன்று இல்லை.

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் அலரி மாளி­கையின் படங்­களை ஊட­கங்கள் ஊடாக வெளி­யிட்டு நானும் எனது குடும்பத்­தி­னரும் பொது மக்­களின் பணத்தில் அதி சொகு­சாக வாழ்ந்­த­தாக மக்­களை நம்ப வைக்க முற்­ப­டு­கின்­றனர். மல­சல கூடம், குளி­ரூட்­டப்­பட்ட படுக்­கை­யறை மற்றும் தொலைக்­காட்சி வச­திகள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய ஓய்­வறை இதில் அனை­வ­ரி­னதும் கவ­னத்தை ஈர்த்­தி­ருக்கும். இது 2013 ஆம் ஆண்டு பொது நல­வாய மாநாடு தொடர்பில் அமைக்­கப்­பட்­ட­தாகும். சர்­வ­தேச தரத்­துக்கு அமை­வாக புதுப்­பிக்­கப்­பட்­ட­தாகும் என்­பதை நான் மக்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்­து­கின்றேன். இங்கு அம்­மா­நாட்­டுக்கு வருகை தந்த அரச தலை­வர்­க­ளுக்­கான கண்­காட்­சி­யொன்றும் விருந்­து­ப­சார நிகழ்­வொன்றும் இடம்­பெற்­றது.

அத்­துடன் எனது அர­சாங்கம் மேற்­கொண்ட நாசம், ஊழல் மற்றும் மோச­டி­களை தேடு­வ­தாக கூறிக்­கொண்டு ஒரு குழு பொலி­ஸா­ரு­டனும் பொலிஸார் இல்­லா­மலும் பல்­வேறு இடங்­களை சுற்­றி­வ­ளைத்து வரு­கின்­றனர். இவர்கள் எனது உருவம் பொறித்த பிளாஸ்டிக் சுவர் கடி­கா­ரங்கள், சால்வை அடை­யாளம் உள்ள தேநீர் கோப்­பைகள், ஸ்டிக்­கர்கள் மற்றும் சுவரொட்டிகளைக் கைப்­பற்றி அத­னூ­டாக நானும் எனது அர­சாங்­கமும் ஊழல் செய்­த­தாக பிர­சாரம் செய்­கின்­றனர். எனினும் இவ்­வா­றான பொருட்கள் எந்­த­வொரு நப­ரி­டமும் இருப்­பது சட்ட ரீதி­யாக குற்­ற­மில்லை என்­பதை யாவரும் அறிந்­ததே.

இந் நிலையில் எனது மனைவி திறை­சே­ரியில் இருந்து 100 கிலோ தங்­கத்­தினை விற்­பனை செய்ய முற்­பட்­ட­தாக குற்றச் சாட்டு முன் வைக்­கப்பட்­டுள்­ளது. அது தொடர்பில் பொலிஸார் பதி­ல­ளித்­துள்ள நிலையில் நான் மேல­தி­க­மாக எத­னையும் கூற விரும்­ப­வில்லை. திறைசேரியில் உள்ள தங்­கத்­தினை ஜனா­தி­ப­தியின் மனைவி மட்­டு­மன்றி திறை­சேரி செய­லா­ளரால் கூட விற்­பனை செய்ய முடி­யாது என்­பதை மட்டும் நான் சுட்டிக் காட்ட விரும்­பு­கின்றேன்.

எனது மகன்­மா­ருக்கு சொந்­த­மான லம்­போ­கினிகார்கள் உள்­ள­தாக கூறிக்­கொண்டு பந்­தயக் கார்கள் உள்ள வீடு­க­ளையும் அதன் உரு­வத்தை ஒத்த முகங்­களைக் கொண்ட கார்கள் உள்ள இடங்­க­ளையும் பொலிஸார் சுற்றி வளைக்கும் நிலைமை ஒன்று கடந்த நாட்­களில் அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­தது. எனினும் இது­வரை எந்­த­வொரு லம்­போ­கினி காரும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. கடலில் தரை­யி­றக்க முடி­யு­மான விமானம் ஒன்றை தேடி வீர­கெட்­டி­யவில் எனக்கு சொந்­த­மான இடம் ஒன்று பொலி­ஸாரால் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.
அத்­துடன் அலரி மாளி­கையில் திரு­டப்­பட்ட பொருட்கள் என சந்­தே­கித்து எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் சொந்­த­மான பொருட்கள் அடங்­கிய இரு கொள்­க­லன்கள் பொலி­ஸாரின் சோத­னைக்கு உள்­ளா­னது. நான் எனது உத்­தி­யோகபூர்வ இல்­லத்தில் இருந்த எனது பொருட்­க­ளையே அதில் வைத்­தி­ருந்தேன். எனக்கு கொழும்பில் ஒரு உத்­தி­யோகபூர்வ இல்லம் ஒன்று இல்­லாத நிலை­யி­லேயே அவ்­வாறு கொள்­க­லனில் நான் வைத்­தி­ருந்தேன். முன்னாள் ஜனா­தி­ப­திக்கு வழங்கப்படக் கூடிய உத்­தி­யோ­க­பூர்வ இல்லம் எனக்கு கிடைக்கும் வரை அந்த பொருட்கள் அந்த கொள்­க­லன்­க­ளி­லேயே இருக்கும்.

இலங்­கையின் சுதந்­தி­ரத்தின் பின்னர் யாரும் செய்­யாத பல அபி­வி­ருத்­தியை எனது அர­சாங்­கமே செய்­தி­ருக்­கின்­றது என்­பதை யாரும் ஏற்­றுக்­கொள்வர். இந் நிலையில் இந்த அடிப்­படை வச­திகள், அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள செல­வாகும் தொகையை விட மூன்று முதல் 10 மடங்­குகள் வரையில் கணக்குக் காட்டி எனது அரசின் அதி­கா­ரி­களும் அர­சியல்வாதி­களும் பாரிய மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக கடந்த ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரத்தின் போதி­லி­ருந்தே குற்றச்சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டன. எனினும் இவ்­வா­றான திட்­டங்­களின் செல­வு­களைக் கணிப்­பது பிர­பல பொறி­யி­ய­லா­ளர்­களைக் கொண்ட தொழில்­நுட்ப வல்­லு­நர்­களைக் கொண்ட குழு­வி­ன­ரா­லாகும்.

அதன் பின்னர் அந்த திட்டம் நாட்டின் சிரேஷ்ட பிர­ஜை­களைக் கொண்டு உரு­வாக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வையால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட டென்டர் குழு­வி­னரால் ஆரா­யப்­படும். அபி­வி­ருத்தி வேலைத் திட்டம் தொடர்பில் வெளி நாடு­க­ளுடன் கையெ­ழுத்­திடும் அனைத்து திட்­டங்­க­ளுக்கும் சட்ட மா அதி­பரின் அனு­மதி பெறப்­ப­டு­வது கட்­டாயம் என்­ப­துடன் அதன் பின்னர் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரமும் அவ­சி­ய­மாகும். இலங்கை மத்­திய வரு­மானம் பெரும் நாடாக தற்­போது பட்­டியல் இடப்­பட்­டுள்­ளதால் அபி­வி­ருத்தி தொடர்பில் எம்மால் அபி­வி­ருத்தி உத­வி­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாது. அதனால் எனது அரசு அபி­வி­ருத்தி வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுக்க ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான், சீனா மற்றும் இந்­திய அர­சுகள் வழங்­கிய உதவிக் கடன்­களை இத்­திட்­டங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தியது. இவ்­வா­றான அனைத்து நட­வ­டிக்­கை­களும் சர்­வ­தேச பொறி­யியல் சேவை­யா­ளர்­களின் பூரண மேற்­பார்­வையின் கீழேயே முன்­னெ­டுக்­கப்­படும்.

அப்­ப­டி­யானால் குற்றச் சாட்­டுக்­களை சுமத்­துவோர் சொல்­வது போன்று மூன்று முதல் 10 மடங்­காக திட்­ட­மி­டப்­பட்ட திட்டச் செல­வினை கூட்டிக் காட்டி மோசடி செய்­தி­ருப்பின், குறித்த செயற்­திட்­டங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட நிறு­வ­னங்கள், சர்­வ­தேச ஆலோ­ச­கர்கள், கடன் வழங்­கியோர் என அனைத்து தரப்­பி­னரும் இத­னுடன் இணைந்து சதி செய்தி­ருக்க வேண்டும்.

சில நபர்கள் மட்­டு­மன்றி பல நூறு பேர் இவ்­வா­றான திட்­டங்கள் தொடர்பில் சம்­பந்­தப்­ப­டு­வதால் இவ்­வா­றான மோச­டிகள் இடம்­பெ­று­வது நடைமுறை சாத்­தி­ய­மற்­றது.

இந்த திட்­டங்­களை பொறுப்­பேற்கும் நிறு­வனம் அவற்றை உப ஒப்­பந்த நிறு­வ­னங்க­ளிடம் கைய­ளிப்­ப­தா­கவும் அதனால் திட்­டத்­தினை உப ஒப்­பந்­த­கா­ரர்­களை வைத்தே செய்து முடித்து விடலாம் எனவும் சிலர் கூறு­கின்­றனர். எனினும் நிர்­மாண கலையை பொருத்­த­வரை சில விட­யங்­களை உப ஒப்­பந்தக் காரர்­களை வைத்து செய்ய முடி­யு­மாக இருந்த போதிலும் முழு திட்­டத்­தி­னையும் பிர­தான ஒப்­பந்தக் காரரே பொறுப்­பேற்க வேண்டும்.

பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் ஒரு அபி­வி­ருத்தி திட்­டத்தின் பல்­வேறு பகு­திகள் தொடர்பில் வெவ்­வே­றான நிறு­வ­னங்­களே நிதிப்­பங்­க­ளிப்பை வழங்கும். அதி­வேக பாதையின் இரு பகு­திகள் ஜப்பானின் கட­னு­த­வி­யு­டனும் ஒரு பகுதி சீனாவின் கட­னு­த­வி­யு­டனும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இங்கு விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­வது சீன­ாவி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கடன் தொகை தொடர்பில் மட்­டு­மே­யாகும். கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக இந் நாட்டில் இருந்த அரசாங்கங்களுக்கு உதவி புரிந்த ஒரு சகோதர நாடே சீனாவாகும்.

ஒவ்வொரு சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் கடன் வழங்குவது தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதி செய்யும் உள்ளக பொறிமுறைகள் உள்ளன. பல தசாப்தங்களாக எமது நாட்டுக்கு நட்போடு கைகொடுத்த ஒரு நாட்டை புண்படுத்தும் வகையில் நாம் நடந்துகொள்ள கூடாது என சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் யோசனை கூறுகின்றேன்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போதும் அதன் பின்னரும் இணையங்கள், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எவ்வித ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. எனது அரசாங்கத்தை சார்ந்தோர் அந்த குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பர். உண்மை என்றேனும் ஒரு நாள் வெல்லும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts