உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு ஐ.ம.சு.மு. முதன்மை வேட்பாளர் அழைப்பு

thavarasaநமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும்.

அடுத்தவரை இழிவுபடுத்துவதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்துவதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது. இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். அந்த மரியாதை காரணமாகவும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் ஒர் அழைப்பை விடுகின்றேன்.

பொது மேடை ஒன்றில் உங்கள் கருத்தை நீங்களும் எமது கருத்தை நானும் தமிழ்மக்களிடம் எடுத்துச் சொல்வோம். மேலைநாடுகளில் இவ்வாறானதொரு நாகரீகமான பிரசார நடைமுறை உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

ஒரேமேடையில் இருவேறு கருத்துக்கள் கொண்டவர்கள் இருந்து தமது கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைக்கும் பக்குவம் இங்கு எவருக்கும் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

கொண்ட கொள்கையில் உறுதியும் உண்மையும் உள்ளது என்று நம்புகின்றவர்களுக்கு இதுசாத்தியம்.

நான் ஏற்றிருக்கும் கொள்கை உண்மையானது என்ற உறுதியும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. மதிப்புக்குரிய உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் நாம் பொது மேடையில் தோன்ற முடியும்.

இந்த பகிரங்க அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாயின் எதிர்கால அரசியலாளர்களுக்கு நாம் வழிகாட்டிகளாக இருந்தவர்களாவோம்.

தனித்தனியாக பலமேடைகளில் ஒருவரை ஒருவர் சாடுவது அர்த்தமற்றது. அது உங்களைப் போன்றவர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பொருத்தமானதல்ல என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

எனது இப் பகிரங்க வேண்டுகோளை ஏற்பீர்களாயின் இது தொடர்பான மேலதிக ஏற்பாடுகளை இணைந்து செய்வதற்கு என்னை தொடர்புகொள்வீர்கள் என நம்புகின்றேன் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் வேட்பாளர் எஸ்.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ள அழைப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts