உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு – ஜனாதிபதி

முழுமையான பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இடமளிக்காது உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரபால தெரிவித்தார்.

நாட்டின் சுதந்திரத்தையும் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பத்திரிகைகளின் தலைப்புகளை பிரசுரிக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்ட யுகத்தை புதிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பத்திரிகை சங்கத்தின் 60ஆவது ஆண்டு விழா, நேற்று நடைபெற்றது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமது அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு எதிராக எழுதுவதற்கு அரசியல் தலைவர்கள் அன்று பத்திரிகைகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பண்பாடற்ற அனுபவங்களுக்கு அன்று ஒரு அமைச்சராக இருந்த தானும் முகம்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தான் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றியமை தொடர்பாக கடந்த வாரம் ஒரு ஆங்கிலப் பத்திரிகை பொய்யான பல விடயங்களை பிரசுரித்திருந்தமையை தாம் பார்த்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனமும் உரையாடலும் நல்லாட்சிக்கு அவசியம் என்றபோதும், அதன்போது ஊடகத்துக்கு இருக்க வேண்டிய ஊடக ஒழுக்கம், பண்பாடு மற்றும் நியமங்களை பாதுகாப்பது அவசியமானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

அண்மைக் காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு ஜெனீவாவில் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் பெற்ற வெற்றிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு சில அடிப்படைவாதிகள் தூரநோக்கற்ற வகையில் முயற்சிகளை மேற்கொண்டபோது ஊடகங்கள் மிகவும் பொறுப்புடனும் அறிவுபூர்வமாகவும் செயற்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி இதன்போது ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்

இலங்கை பத்திரிகை சங்கத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 10 சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கப்பட்டன.

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளரான பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, இலங்கை பத்திரிகை சங்கத்தின் தலைவர் முதித்த காரியகரவன, தேசிய அமைப்பாளர் உப்புல் ஜனக ஜயசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சமூக வலையமைப்பு இணையத்தளத்தின் ஆசிரியர் விஸ்வதேவராவ், மதன் கடுவா ஆகியோர் உள்ளிட்ட இந்திய ஊடகவியலாளர் குழு ஒன்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது.

Related Posts