போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18) முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது, அதில் முக்கியஸ்தராகக் கலந்துகொண்டு நினைவுரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
வடமாகாண சபை, இனப்படுகொலை சம்பந்தமான தீர்மானத்தை ஏகமனதாக ஏற்று வெளிக்கொண்டு வந்து உண்மையை உலகறியச் செய்தது. பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கின்ற நீதி, தமிழ்ப்பேசும் மக்களது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்துக்கும் உந்துசக்தியாக அமையும்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை மாத்திரமன்றி உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களினதும் நெஞ்சங்களை உலுக்கிய சோகமான செய்திகளை காவி வந்த இந்த நாளானது யுத்தத்தால் உயிரிழந்த எம் இனிய உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளாகும் என்றார்.
உலகளாவிய ரீதியில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் ஒருமித்த மனித சிந்தனையில் களங்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வே முள்ளிவாய்க்கால் சம்பவம். மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு தடுக்கப்பட்டு, சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். தடை செய்யப்பட்ட போராயுதங்கள் பாவிக்கப்பட்டன என்று பறைசாற்றின பல்நாட்டு ஊடகங்கள் அப்போது. வெளிநாட்டு உதவிகள் உதாசீனப்படுத்தப்பட்டு, உள்நாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு, உண்மைநிலை உரைக்காது விட்டு, மக்கள் தொகையைக் குறைத்துக் கூறி, அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகளின் உயிர்களைக் காவிச்சென்றதே முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவு. போரிலே உயிரிழந்த எம் உறவுகளை என்றென்றும் நினைவுகூரத் தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம். முள்ளிவாய்க்கால் எமது வருங்கால அரசியல் பயணத்துக்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ள ஒரு சம்பவம் என்பதில் எமக்குள் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
ஒன்று இரண்டு அல்ல, ஆறு வருடங்கள் கடந்து போய்விட்டன. ஆனால் அக்கொடிய போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதுமான விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட்டும் அதன் முடிவு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலை, தமிழ்மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் நேரடித் தலையீட்டை ஏற்படுத்தும் பொருட்டு தமிழர் தரப்பும் சர்வதேச நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அவை இன்னமும் ஓர் தீர்க்கமான கட்டத்துக்குள் உள்நுழையவில்லை என்பதே உண்மை நிலையாகும் என்றும் சி.வி கூறினார்.
ஐக்கிய நாடுகளுக்கான மனிதவுரிமைகள் மாநாடு நடைபெறுகின்ற ஒவ்வொரு தடவையும் போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கிக் காண்படுவதும் அது இறுதியில் ஓர் காலநீட்சியுடன் முடிவடைந்து போவதும் தான் நாம் கண்டுள்ள யதார்த்தம். ‘காலங்கடந்து கிடைக்கின்ற நீதி கிடைக்காத நீதிக்குச் சமனாகும்’ எனக் கூறப்படுவதுண்டு.
சர்வதேச நாடுகளும் அதனோடு சம்பந்தப்பட்ட அமைப்புக்களும் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது உயிரிழந்த எமது அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பிலான உண்மை நிலையை வெளிக்கொணரும் பொருட்டும் அவர்களுக்கான நீதி கிடைக்கும் பொருட்டும் பொருத்தமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையில் வாழ்கின்ற தமிழ்ப்பேசும் மக்களது அரசியல் உரிமைக்கான கோரிக்கை என்பது இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. தமக்கென ஓர் தனியான மொழி, சமயங்கள், பண்பாடு, பாரம்பரியம், வரலாறு, ஏன் இலங்கையின் மற்றைய நிலப்பகுதிகளில் இருந்து மாறுபட்ட நிலப்பரப்பைக் கூடக் கொண்டிருந்து, பல நூற்றாண்டு காலமாக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற தமிழ்த்தேசிய இனம் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த போதிலும் மாறிமாறி வந்த இலங்கையின் ஆட்சியாளர்கள் வெறுமனே காலத்தைக் கடத்தி வந்தார்களே தவிர தமிழ் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு ஏற்ற பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
வடகிழக்கை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றி வந்துள்ளனர். ஆட்சிக்கு வருகின்ற புதிதில் தம்மைச் சமாதானத் தூதுவர்களாகக் காட்டிக்கொள்ளும் இலங்கையின் அரச தலைவர்கள், தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வினை காண்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதும் பின்னர் காலப்போக்கில் தமிழர் விரோதப்போக்குக்கு மாறுவதும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளன. இந்நிலை இனியும் நீடிக்கக் கூடாது.
தற்போது தோன்றியுள்ள ஓர் சாதகமான நிலைமை மாற்றமடைவதற்கு முன்னர் காலதாமதத்தை மேற்கொள்ளாது தமிழ்ப்பேசும் மக்களது பிரதான பிரச்சினையான அதிகார பரவலாக்கம் தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய கடமை நம் அனைவரின் முன்னும் உள்ளது. விரைந்து செயற்படாத தன்மையும் அளவுக்கதிகமான காலநீட்சியும் பிரச்சினைகளினதும் அதற்கான தீர்வுகளினதும் பரிமாணங்களை மாற்றியமைக்கும் அபாயம் கொண்டத என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முதமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆட்சியாளர்கள் எம்முடனும் மற்றும் சர்வதேச சமூகத்துடனும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசியத்தின் அரசியல் அபிலாசைகள் தொடர்பில் விரைந்து தீர்வுகாண முன்வர வேண்டும். இதுவே இலங்கையில் வாழ்கின்ற பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர கௌரவத்துடன் கூடிய உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்கும் என விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.