ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பல உண்மைகளைப் பேசப் போவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தில்ஷான் அறிவித்திருக்கிறார். தில்ஷானின் அறிவிப்பு வந்த நிலையில் மற்றொரு மூத்த வீரர் ஜெயசூர்யா இலங்கையை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.,
இலங்கை கிரிக்கெட் அணியில் ஏகப்பட்ட அக்கப்போர்கள்… அண்மையில்தான் முத்தையா முரளிதரனுக்கும் கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரும் மோதலே வெடித்தது.
தற்போது இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் மறுபக்கத்தை சக வீரரான தில்ஷானே போட்டு உடைக்கப் போவதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து தில்ஷான் ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியுடன் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே தில்ஷான் விடைபெறுகிறார். அந்த தருணத்தில் தாம் பல்வேறு உண்மைகளைப் பேசுவேன் என கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது, கேப்டன் பதவி மிகவும் கடினமாக இருந்தது. சீனியர் வீரர்களாக இருந்த ஜெயவர்த்தனே, சங்கக்காரா, மேத்யூஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
தற்போது ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் போது மேலும் பல உண்மைகளைக் கூறுவேன் என தில்ஷான் தெரிவித்திருக்கிறார். அனேகமாக சனத் ஜெயசூர்யா மீது அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் தில்ஷான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வெளிநாடு ஒன்றுக்கு ரகசியமாக தப்பி செல்லலாம் என்ற முடிவுடன் சனத் ஜெயசூர்யா இருக்கிறாராம்..