பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்வதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண சுற்றுலாத்துறை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
சுற்றுலாவானது சமூகத்தை உருமாற்றம் செய்யக் கூடிய ஒரு சக்தியாக வாழ்வாதார வாய்ப்புக்களையும், வறுமையை நீக்கவல்ல சூழலையும் இலட்சோப இலட்சம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தவல்லது. பல்லின கலாசாரப் புரிந்துணர்வையும் கலாசார இயற்கைப் பராம்பரியங்களைப் பாதுகாக்கும் சக்தியாகவும் சுற்றுலா இன்று வளர்ந்துள்ளது. தொடர்ந்து செல்லும் பொருளாதார விருத்தியை மேம்படுத்த உதவி வருகிறது.
இந்த உலக சுற்றுலாத் தினமானது ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தால் 1980ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் செப்ரெம்பர் 27ந் திகதியன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகமானது சுருங்க முக்கிய காரணமாய் இருந்தது தொலைத் தொடர்பு என்றால் மக்களை அந்தச் சுருங்கிய உலகத்தினுள் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள வைத்தது சுற்றுலாத் துறையே. இன்று பல நாடுகளின் பொருளாதார விருத்திக்கு அத்திவாரமாகச் சுற்றுலாத் துறை அமைந்துள்ளது.
இன்று சர்வதேச சமூகம் 2015ம் ஆண்டுக்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலில் நிலையான அபிவிருத்தி இலக்காக சுற்றுலாவையும் அடையாளப்படுத்தி அத்துறை வேலை வாய்புக்களையுந் தரவல்லது என்றும் உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளூர் உற்பத்திப்பொருட்களையும் மேம்படுத்த வல்லது என்றும் கூறியிருக்கும் இக் கட்டத்தில் ஐக்கிய நாடுகள் செயலரின் கூற்று தனி முக்கியத்துவம் பெறுகின்றது.
சுற்றுலாத் துறையை எடுத்தால் அதனால் எப்பேர்ப்பட்ட தாக்கங்கள் ஏற்படுகின்றன, அவை நற்தாக்கங்களா தீதானவையா என்று எல்லாம் ஆராய்ந்து பார்ப்பது என்பது இப்பொழுது ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் வருமானத்தில் சுற்றுலா ஏற்படுத்துந் தாக்கம், தொடர் பயணிகள் வராமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்று எல்லாவற்றையும் பூதக் கண்ணாடிக்குள்ப் போட்டு ஆராய்ந்து பார்க்கின்றோம்.
அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடுபவர் கையாலாகாதவர். சமையல்க்காரர் மிகக் குறைந்த தொழிலைச் செய்பவர் யன்னல் கழுவுபவர் கடையிலும் கடையானவர். ஆனால் இன்று அவர்கள் யாவரும் சமூகத்தால் மிகவும் மதிக்கப்படுபவர்கள்.
காலம் மாறியுள்ளதை எம் மக்கள் உணர வேண்டும். இதே போன்று தான் இன்று பெண்கள் சுற்றாடல் விடுதிகளில் வேலை பெறுவதைக் தரக் குறைவாக நாம் எண்ணுகின்றோம். ஆனால் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதந் தரும் விதத்தில் அவர்களின் கடமை நேரங்கள், இருப்பிட வசதிகள் போன்றவை பாதுகாத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல பெண்கள் சேர்ந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதால் அவர்களின் பாதுகாப்பு உறுதியாக்கப்படுகிறது.
முன்னர் போல் நாங்கள் சிந்திக்கத் தேவையில்லை. இயக்கங்களில் போராடச் சென்ற எம் பெண்கள் ஏன் இப்பேர்ப்பட்ட தொழில்களில் தமது திறமைகளை வெளிக்காட்டக் கூடாது?
இன்னொன்றையும் நான் கூற வேண்டும். எமது சூழலில் பல கண்டனங்களுக்கு இலக்காகும் எமது இளைஞர் யுவதிகள், எமது சமூகத்தால் கண்டிக்கப்படும் தொழில்களையே வெளிநாடுகளில் இன்று செய்து இங்கு பணம் அனுப்புகின்றார்கள்.
விரைவில் உணவகக் கல்லூரி ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அதில் எமது இளைஞர் யுவதிகள் சேர்ந்து உணவகத் துறையில் சரித்திரம் நாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
உங்கள் விழுமியங்களுக்கும் பண்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாமல் நீங்கள் உங்கள் கடமைகளைச் செய்ய வல்லவர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
போதைப் பொருளை பயணிகள் அறிமுகப்படுத்தக் கூடும் என்பதற்காக சுற்றுலா தேவையில்லை என்று கூறுவது மடமை. பிழையான வழிகளில் நடப்பவர்களை உரிய அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுக்கலாம். உண்மையில் சுற்றுலாப் பொலிஸ் சேவையொன்றை இதற்காக நாங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தலாம்.
வேலையில்லாப் பட்டதாரிகள் தமக்கு வேலை வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். சுற்றுலாத் துறையானது அப்பேர்ப்பட்டவர்களுக்கு நல்ல சிறப்பு வாய்ப்புக்களைத் தரவல்லது.
இது சம்பந்தமாக எமது சுற்றுலா அதிகாரமையமானது யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவரும் அல்லது வெளிவந்த எமது பட்டதாரிகளுக்கு என்று சுற்றுலா வேலை வாய்ப்புக்கள் பற்றியதும் தேவையான திறன்கள் பற்றியதுமான கருத்தரங்கங்களை பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து நடாத்த முன்வர வேண்டும்.
பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது எனக்கு வியப்பைத் தருகின்றது.
அரசாங்க உத்தியோகங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. சிங்கள அலுவலர்களைத் தெற்கில் இருந்து அண்மையில் வடக்குக்கு அரசாங்கம் அனுப்பியது நினைவிருக்கலாம். எப்பொழுது அவர்கள் இடத்திற்குத் தமிழ் மக்களை பதிலீடு செய்ய முன் வருவார்களோ தெரியாது.
ஆனால் அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்கின்றார்கள். 40,50 வருடங்களின் பின்னர் கிடைக்கும் ஓய்வூதியத்திற்காக வலிய வரும் ஸ்ரீதேவியை உதாசீனம் செய்கின்றார்கள்.
ஓய்வூதிய திட்டங்கள் பல இருக்கின்றன.இன்று கூடிய வருவாயைப் பெற்று இத் திட்டங்களுக்கு மாதாந்தத் தொகையாகத் தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்தால் உங்களுக்குக் கூடிய ஓய்வூதியத்தைப் பெற வாய்ப்பிருக்கிறது.
ஆனால் என் நண்பர் ஒருவர் கூறினார், அதுவல்ல காரணம்! வேலை ஏதும் செய்யாத வேலை வேண்டும் என்பதால்த்தான் எம்மவர் அரசாங்க வேலைகளை நாடுகிறார்கள் என்று. அது சரியோ பிழையோ நானறியேன்.ஆனால் வேலையற்ற பட்டதாரிகள் சுற்றுலாத் துறையில் போதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம் என்பதைக் கூறி வைக்கின்றேன்.
எனவே சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதில் பொது மக்களும் அலுவலர்களும் சேர்ந்து ஒத்துழைத்தால்த்தான் எம்மால் இந்தத் துறையை மேம்படுத்த முடியும். இத்துறை எமக்கு வருவாயைத் தரவல்லது. ஆகவே நாங்கள் திட்டமிட்டு எமது சுற்றுலா மையத்தை கவனமாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.
மாற்றங்கள், முறைமைகள், திட்டங்கள் ஆகியன எமது பாரம்பரியத்தையும், சூழலையும், சுற்றாடலையும் கவனத்திற்கு எடுத்து வகுக்கப்பட வேண்டும். இதனால்த்தான் சுற்றுலா சம்பந்தமான சகலதையும் உள்ளடக்கிய மேன்மைத் திட்டமொன்றை வடமாகாணத்திற்கு வகுக்க வேண்டும் என தெரிவித்தார்.