உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது

நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுதல் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமான கைவிடப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை வைத்தியர் ஜி.செந்தூரன் தெரிவித்தார்.

சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த போராட்டத்தினை கைவிடுப்படுகிறது.

எனினும் இது தற்காலிகமாகவே கைவிடப்படுகிறது.கூடிய விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.

அந்த போராட்டம் யாழ்.குடாநாட்டை முழுவதும் உள்ளடக்கியதாக காணப்படும். இன்று எங்களுடைய போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

எனவே சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பரவிக் கொண்டிருக்கும் எண்ணெய் கசிவு தொடர்பில் உரிய தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.

எங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம். எண்ணெய் பாதிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சுன்னாகம் சிவன் கோவில் முன்றில் கடந்த 20ஆம் திகதி முதல் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எண்ணெய் கசிவுக்கு காரணமான மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக மூடிவிடுதல்’, ‘எரிபொருள் மின்சக்தி அமைச்சர் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு உடனடியாக வருகை தர வேண்டும்’

‘கழிவு எண்ணெயை வெளியேற்றுதல் மற்றும் குடிநீர் விநியோகத்துக்கான நிரந்தர நடவடிக்கையை ஆரம்பித்தல்’ ஆகிய முன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்,’எரிபொருள் மின்சக்தி அமைச்சர் ,பிரதமரின் செயலாளர்களை சந்தித்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர் இது தொடர்பாக விரைவில் தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்துள்ளனர்.

எனவே பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை வைத்தியர் ஜி.செந்தூரன் தலமையிலானவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தினை தாம் கைவிடுமாறு இன்றைய தினம் கோரிக்கை விடுக்கப்பட்டமையினை தொடர்ந்தே இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Posts