உண்ணாவிரத போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா அதுகோரல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரதமிருக்கும் போராட்டத்தின் மூலம் அல்ல.
தேசிய அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே அவ்விடயத்தில் அரசியல் கைதிகள் விதிவிலக்கல்ல’ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் என்ற பெயரில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி யெஜச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.