உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 33 அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்!

தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவ அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது பலரின் நிலைமை மோசமடைந்து வருகின்றமை தொடர்பில் மருத்துவ அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் மகசின் நிறைச்சாலையில் 12பேரின் உடல் நிலை மோசமடைந்து நண்பகலளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்றிரவு மகசின் சிறைச்சாலையில் உடல் நிலை மோசமடைந்த நிலையில் எண்மரும் அநுராதபுர சிறைச்சாலையில் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதற்கு முன்னதாக 12பேர் குறித்த இரு சிறைச்சாலைகளிலிருந்தும் உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நேற்றைய தினம் மகசின் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விஜயம் செய்து கைதிகளுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை, அருட்தந்தை சக்திவேல், வட்ரக்க விஜித தேரர் உள்ளிட்டோரும் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவையும் வெளியிட்டனர்.

மேலும் அவர்களின் விடுதலைக்காக தம்மாலான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இதேநேரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நண்பகலளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருதயநாதன் மற்றம் சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஆகியோர் நேரில் சென்று கைதிகளை பார்வையிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருதயநாதன் கைதிகள் விடுதலை குறித்து கூட்டமைப்பின் தலைவரிடம் விரைந்து எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

Related Posts