உணவுக்காக உண்ணாவிரதம் இருந்த மீரியாபெத்தை மக்கள்

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மீரியபெத்தை தேயிலைத் தோட்ட மக்களின் நினைவாக மலையகத்தின் சில இடங்களிலும் தலைநகரிலும் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடந்துள்ளன.

இதனிடையே, பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக சிவில் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்போது தற்காலிகமாக பழைய தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் அறைகள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் போதிய வசதிகள் இன்றி சிரமப்படுவதாக மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை எம். சத்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒரே அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மக்களுக்கான உணவை சமைத்துக் கொடுத்துவந்த இராணுவம் திடீரென்று அந்தப் பணியிலிருந்து ஒதுங்கிகொண்டுள்ள சூழ்நிலையில், உணவின்றி சிரமப்பட்ட மக்கள் உணவுகோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மண்சரிவு நடந்து ஒருமாதம் கடந்துள்ள சூழ்நிலையில் இராணுவத்தால் தொடர்ந்தும் உணவு சமையலுக்கான பணியை முன்னெடுக்க முடியாது என்று ஊவா மாகாண அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான செந்தில் தொண்டமான் கூறினார்.

குறித்த மக்களுக்கான சமையல் பொறுப்பை தோட்ட நிர்வாகம் உரிய முறையில் பொறுப்பேற்காத நிலையிலேயே மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிரந்தரக் குடியிருப்புகளை அமைக்கும் பணிகள் மூன்று மாதகாலத்திற்குள் பூர்த்தியடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் செந்தில் தொண்டமான் கூறினார்.

Related Posts