உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டுமென உணவியல் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

sugar_cube_bowl

நாம் உண்ணும் உணவில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியின் அளவை கலோரிகள் என்று கணக்கிடுகிறோம். அந்த கலோரி கணக்கின்படி தற்போது ஒருவர் உட்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரையின் அளவானாலும், பழச்சாறு, தேன் போன்றவற்றில் இயற்கையிலேயே இருக்கும் சர்க்கரையானாலும், ஒட்டுமொத்த உணவின் கலோரி அளவில் 10 சதவீதம் வரை சர்க்கரையில் இருந்து ஒருவர் பெறலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதுவே அதிகபட்ச சர்க்கரையின் அளவாக ஒருவரின் உணவில் இருக்க வேண்டும் என்றும் அதுவே ஆரோக்கியமான உணவுமுறை என்றும் இதுவரை பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆலோசனைக்குழு பரிந்துரைத்து வந்திருக்கிறது.

இந்த ஒட்டுமொத்த சர்க்கரையின் அளவை 10 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்கவேண்டும் என்று தற்போது பிரிட்டனின் உணவுக்கான அறிவியல் ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. காரணம் ஒருவரின் உணவில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவரது உடல்பருமன் கூடுவதுடன், அவருக்கு சர்க்கரை நோயும் இதயநோர்களும் உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் பலமடங்கு அதிகரிப்பதாக இந்த அமைப்பின் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

தற்போது மருத்துவர்களால் அனுமதிக்கப்படும் ஒருவரின் அன்றாட தேவையான 10 சதவீத கலோரிகளை அவர் சர்க்கரை மூலம் பெறலாம் என்கிற அணுகுமுறை உரிய பலனைத் தரவில்லை என்றும் மேலதிகமான இளம் தலைமுறையினர் கூடுதல் உடல் பருமனுடன் வளர்கிறார்கள் என்று தெரிவித்திருக்கும் உணவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த பிரச்சனையை எதிர்காலத்தில் குறைக்கவேண்டும் என்றால் உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைக்கவேண்டும் என்கிற இந்த பரிந்துரை வரவேற்கத்தக்கது என்று கூறும் சென்னையின் பிரபல நீரிழிவுநோய்க்கான சிறப்பு மருத்துவர் ஏ ராமச்சந்திரன், இத்தகைய கட்டுப்பாடுகளை இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அமுல்படுத்துவது கடினம் என்கிறார்.

Related Posts