உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ மாவீரர் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் கப்டன் வெண்ணிலவன், கப்டன் பேரின்பன், லெப் செந்தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாய் அவர்கள் கோப்பாயில் முதன்மைச்சுடரை ஏற்றினார்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சுடரேற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்ப்புப்பூர்வமாக ஈகைச்சுடர் ஏற்றி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது வீரச்சாவடைந்த மாவீரரின் உறவுகள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதே வேளை மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்திலும் வவுணதீவு, தாண்டியடி துயிலுமில்லம் அருகே மாவீரர் நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

இதன் போது மாவீரர் உறவுகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீர் துயிலும் இல்லத்தில் மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.மூன்று மாவீரர்களின் தந்தையான கந்தையா வைரமுத்து என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் , மத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுத்திக்கப்பட்ட யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு மன்னார் மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு உடைத்து சேதமாக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உடைக்கப்பட்ட கல்லறைகள் , கற்கைள் ஆங்காங்கே சிதறி காணப்பட்ட போது இதனை ஓரிடத்தில் குவித்த மாவீர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்திலும் மாவீரர்களுக்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர் மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்தோடு முல்லைத்தீவு கடற்கரை மாவீரர் அஞ்சலி மற்றும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் யாழ், தீவுப்பகுதிகளில் ஒன்றான வேலணை, சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் இன்றைய மாவீரர் நாள் நினைவுகூரும் நிகழ்வில் கலந்துகொண்டு சுடரேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts