உடுவில் மகளீர் கல்லுாரி தொடர்பாக பெற்றோர் சங்கம் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையின் முழு வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.
உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபர் நியமனம் தொடர்பாகவும், அதன் போது நடைபெற்றுள்ள நேர்மையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என்ற வகையிலும்,
பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்ற வகையிலும், கல்லூரிச் சமூகத்தின் ஒரு முக்கியமான பகுதியினர் என்ற வகையிலும் நாம் சமூகத்துக்கு சில வெளிப்படுத்தல்களை முன்வைக்க விரும்புகிறோம்.
தனியார் பாடசாலை என்ற வகையில் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர்கள் 60 வயதுக்கு மேலும் பணியாற்றுவதற்கு எந்த விதமான சட்டரீதியான தடையும் இல்லை என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம். மேலும் கல்லூரியில் இதற்கு முன்னர் பணியாற்றிய பல அதிபர்கள் 60வயதினைத் தாண்டியும் பணியாற்றியிருக்கிறார்கள்.
உதாரணமாக 2004ஆம் ஆண்டிலே இளைப்பாறிச் சென்ற அதிபர் கலாநிதி செல்வி செல்லையா அவர்களுக்கு இளைப்பாறும் போது 68வயதாக இருந்தது. மிகவும் நேர்மையான முறையிலே தனது அதிபர் கடமைகளைக் கடந்த 12 வருடங்களாகச் செய்துகொண்டிருந்த திருமதி ஷிராணி மில்ஸ் அவர்களுக்குப் பதவி நீடிப்பு வழங்கக் கூடாது எனத் தென்னிந்தியத் திருச்சபையின் செயற்குழு மேற்கொண்டுள்ள முடிவானது பாடசாலையினையும், பாடசாலை மாணவிகளையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என நாம் கருதுகிறோம்.
கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் கல்லூரி திருமதி மில்ஸின் தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வந்தது. பெண்களைக் குடும்பத்திலும், சமூகத்திலும் அடக்கி வைத்திருக்க வேண்டும் எனக் கருதும் ஆண்மையவாத சமூகத்திலே திருமதி ஷிராணி மில்ஸின் தலைமைத்துவம், மாணவிகள் பெண்கள் என்ற வகையிலே சமூகத்தின் ஆதிக்க மனப்பாங்குகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு அவர்களுக்குத் துணிச்சலை வழங்கக் கூடிய ஒன்றாக இருந்தது. மாணவிகளின் ஆளுமை வளர்ச்சிக்கு அதிபர் திருமதி மில்ஸ் ஆற்றிய பங்களிப்பினைப் பெற்றோராகிய நாம் பாராட்டுகிறோம்.
திருமதி ஷிராணி மில்ஸினை தென்னிந்தியத் திருச்சபை ஓய்வு பெறச் செய்த முறையானது மிகவும் வேதனை அளிப்பதாக எமக்கு இருக்கிறது. அவரை அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி தென்னிந்தியத் திருச்சபையினைச் சேர்ந்த நிருவாகிகளே அவரைக் கடந்த ஜூன் மாதத்திலே கேட்டிருக்கிறார்கள். திருச்சபையின் பேராயர் அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்படும் என வாய்மொழி மூலம் உறுதி அளித்திருக்கிறார்.
திருமதி மில்ஸுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என புதிதாக அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி சுணீத்தா ஜெபரட்ணத்துக்கும் ஆயர் கூறியுள்ளார். திருமதி மில்ஸுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாதவிடத்து தானும் தனது மகளும் போராட்டத்திலே குதிப்போம் என திருமதி ஜெபரட்ணம் அவர்களே மாணவிகளுக்குச் சொல்லியிருக்கிறார்.
இவ்வாறான நேர்மையற்ற செயற்பாடுகள் மூலம் திருச்சபையினைச் சேர்ந்தவர்களும், கல்லூரியின் புதிய தலைமையும், திருமதி ஷிராணி மில்ஸினை மட்டுமல்லாது, பாடசாலையிலே கல்வி கற்ற மாணவர்களையும் ஏமாற்றியிருக்கிறார்கள். இதனைப் பெற்றோராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு புகழ்பூத்த கல்லூரியின் நிருவாகிகள் இவ்வாறு செய்துள்ளமை கல்லூரியின் நற்பெயருக்குக் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நேர்மையற்ற செயற்பாடுகளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கல்லூரியின் அதிபர் தேர்வுக்குழுவிலே அங்கம் வகித்த திருமதி சாவித்திரி சுமந்திரன், செல்வி விஜுலா அருளானந்தம், திருமதி சுகந்தி வைரசிங்கே, மற்றும் இந்தியாவினைச் சேர்ந்த கலாநிதி அலெக்ஸாண்டர் ஜேசுதாசன் ஆகியோர் துணை போயிருக்கிறார்கள். இந்த நேர்மையற்ற செயற்பாடுகளை எதிர்த்து அமைதியாகப் போராடிய மாணவிகள் மீது கல்லூரி ஆசிரியர்களும் பாதிரி ஒருவரும் தாக்குதல் நடாத்தி இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த பல வருடங்களாகப் பல சீர்கேடுகள் இருந்து வந்திருக்கின்றன. பாடசாலை ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களிலே சிலர், விடுதிப் பணியாளர்களிலே சிலர் பிறழ்வான நடத்தைகளிலே ஈடுப்பட்டிருந்தார்கள். ஆண் ஆசிரியர்கள் பெண் மாணவிகளுக்குச் சில தகாத முறைகளிலே தண்டனை வழங்க முற்பட்டிருக்கிறார்கள். இதனால் மாணவிகளின் உள நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் அதிபர் ஷிராணி மில்ஸின் கவனத்துக்குப் பாடசாலை மாணவர்களினாலும் பெற்றோரினாலும் கொண்டு செல்லப்பட்ட போது அதிபர் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனைக் கல்லூரியின் புதிய அதிபராகிய திருமதி சுணீத்தா ஜெபரட்ணமும் (முன்னைய உப அதிபர்), புதிய உப அதிபராகிய திருமதி ஜீவானந்தினி அமலதாஸும் பல வழிகளிலே தடுத்து நிறுத்த முயற்சித்தனர் என்பதனை மாணவர்களும் பெற்றோரும் நன்கு அறிந்திருந்தனர். திருச்சபையினர் இதனைக் கண்டும் காணாமல் இருந்து தவறு செய்பவர்களுக்குத் துணைபோயிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நியாயத்தினைக் கண்டுகொள்ளத் தவறிய இரண்டு பேரினது நிருவாகத்தின் கீழே கல்வி கற்பதற்கு மாணவிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். அந்த அச்சத்திலே உள்ள நியாயத்தன்மையினைப் பெற்றோராகிய நாம் புரிந்துகொண்டுள்ளோம். தமது பிரச்சினைகளைத் தாம் சென்று சொல்லக்கூடிய ஒருவராகவும், தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தமக்குப் பாதுகாப்பினை வழங்கக் கூடிய பாடசாலைக்குள் இருக்கும் ஒரே தலைவராக அவர்கள் ஷிராணி மில்ஸினை நோக்கினார்கள். எமது பிள்ளைகள் திருமதி ஷிராணி மில்ஸ் அதிபராகத் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பிப் போராட்டத்திலே ஈடுப்பட்டமைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
தென்னிந்தியத் திருச்சபையின் தலையீடுகள் பாடசாலையின் நலனினை மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பாடசாலையின் ஆசிரியர்களாகத் திருச்சபைக்கு விசுவாசமான பாதிரிமார், அவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்தோர் மற்றும் உறவினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னிந்தியத் திருச்சபையில் இருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அமெரிக்கன் மிஷன் சபையினைச் சேர்ந்த பாதிரிமாரினையும் சபையாரினையும் மீளவும் தென்னிந்தியத் திருச்சபையினை நோக்கிக் கவருவதற்கான சலுகைகளாக உடுவில் மகளிர் கல்லூரியின் ஆசிரியர் நியமனங்கள் கையாளப்படுகின்றன.
ஆசிரியர் நியமனங்களின் மீது அதிபருக்கு இருந்த அதிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சபையின் விருப்பு வெறுப்புகளே நியமனங்களிலே தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன. இதன் காரணமாகக் கல்லூரியில் தற்போது கடமையாற்றும் ஆசிரியர்களிலே ஒரு பகுதியினர் பொருத்தமான கல்வி சார் தகைமைகளையும் தொழிற் தகைமைகளையும் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். திருமதி ஷிராணி மில்ஸின் பதவி நீக்கத்தினை அடுத்து இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என நாம் பயப்படுகிறோம். இதனால் பாடசாலையின் கல்வித் தரம் மிகவும் வீழ்ச்சி அடையக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளில் தொண்ணூறு வீதத்திற்கும் மேற்பட்டோர் சைவசமயத்தைப் பின்பற்றுவோர். அவர்கள் வழிபடுவதற்கு வழிபாட்டிடம் அங்கு இல்லை. கல்லூரியில் வழிபாட்டுரிமை மறுக்கப்படுகின்றமையினை நாம் ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறோம்.
உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளால் நடத்தப்பட்ட ஒரு வாரகால அகிம்சை வழியிலான போராட்டத்தையடுத்து உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் செயற்குழு 12.09.2016 (திங்கட்கிழமை) காலையிலிருந்து மதியம் வரை தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீனத்தின் வணக்கத்துக்குரிய ஆயர் கலாநிதி டானியல் தியாகராஜா அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அப்பேச்சுக்களில் உடுவில் மகளிர் கல்லூரியில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண்பதற்காக நிறைவேற்றப்படவேண்டிய மூன்று கோரிக்கைகளையும் ஏனைய அவசர விடயங்களையும் வணக்கத்துக்குரிய ஆயர் அவர்களுக்கு விபரித்தோம்.
நாம் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:
1. மாணவிகளும் பெற்றோரும் ஏற்றுக்கொண்ட முன்னாள் அதிபர் திருமதி சிராணி மில்சின் பதவியை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடித்தல்.
2. உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளால் நடத்தப்பட்ட ஒரு வாரகால அகிம்சை வழியிலான போராட்டத்தில் மாணவிகளைத் தாக்கியோர்பற்றி சுயாதீனவிசாரணை செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல்.
3. அகிம்சை வழியிலான போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது. ஏற்கனவே பழிவாங்கும் செயற்பாடுகள் தொடங்கித் தொடர்வதால் அவை நிறுத்தப்படவேண்டும்.
இவற்றிலே முதலாவது கோரிக்கையினை நிராகரித்த ஆயர் ஏனைய இரண்டினையும் ஏற்பதாக எமக்கு சொன்னார். அவர் தம்மை நம்புங்கள் என்று எமக்குச் சொன்னாலும், திருச்சபையினரின் கடந்த காலச் செயற்பாடுகளும், கல்லூரியின் தலைமைப்பீடத்திற்குத் தற்போது அமர்த்தப்பட்டுள்ளவர்களின் கடந்த காலச் செயற்பாடுகளும் எமக்கு எந்த வகையிலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கவில்லை.இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டுமாயின், ஒரு இடைக்கால நடவடிக்கையாகவாயினும் திருமதி சிராணி மில்ஸ் அவர்கள் மீளவும் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்படல் வேண்டும்.
அத்துடன் கல்லூரியினைத் திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கக் கூடிய வகையிலே மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பழைய மாணவர்களுக்கும், சமூகத்துக்கும் பொறுப்புச் சொல்லக்கூடிய ஒரு புதிய பாடசாலை ஆளுநர் குழு ஒன்று நியமிக்கப்படல் வேண்டும். இதுவே பாடசாலையினை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்கான ஒரு வழியாக அமைவதுடன், பாடசாலையின் தரம் எதிர்காலத்திலே உயர்வதற்கு வழியினை ஏற்படுத்தும்.
1.பாடசாலையின் ஆசிரிய ஆளணி தொடர்பானவை: உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்களில் ஒரு பகுதியினருக்கு உரிய கல்வித்தகைமைகளோ அல்லது தொழில்தகைமைகளோ இல்லை. மேலும் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் தமது தனிப்பட்ட(private) விடயங்கள் தொடர்பில் மாணவிகள் விளங்கிக்கொள்ளும்வகையில் ஒழுக்கக்கேடான வார்த்தைகளை விரசமாகப்பயன்படுத்துவதனால் அவர்கள் மீதான நன்மதிப்பை மாணவிகள் மத்தியில் இழந்துள்ளனர்.
மேலும் ஒரு சில ஆண் ஆசிரியர்களின் ஒழுக்கப்பிறழ்வான வகுப்பறைச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவிகள் பெற்றோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் இம்மகளிர் பாடசாலை கட்டழிவுக்கும் சீரழிவுக்கும் உட்படத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.
2. மாணவிகளின் விடுதி தொடர்பாகவும் அதன் ஒழுக்க விழுமியம் தொடர்பாகவும் அதிர்ச்சியும் வேதனையும் அச்சமும் தரக்கூடிய தகவல்கள் பரவியுள்ளன.
3. இவ்வாறான கட்டழிவுகளும் சீரழிவுகளும் ஏனைய அனைத்து ஆசிரியர்களையும் மாணவியர்களையும் பாதித்து கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளூக்கு குந்தகம் ஏற்படுத்துகின்றன. காலப்போக்கில் தமிழ்ச்சமூகத்தின் பிறழ்ச்சியடந்த தவறான பிரஜைகள் உருவாகவும் தொடர்ந்து சமூகமே சீரழியவும் இம்மகளிர் பாடசாலையின் கட்டழிவுகளும் சீரழிவுகளும் வழிகோலலாம்.
4. இப்பொழுது வணக்கத்துக்குரிய ஆயரால் அதிபர்இ பிரதி அதிபர் முதலிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளவர்களும் இம்மகளிர் பாடசாலையின் கட்டழிவுக்கும் சீரழிவுக்கும் பங்காற்றியும் பங்காற்றும் மெளனத்துடனும்(participatory silence) கடந்த பல வருடங்களாக இருந்துள்ளார்களா எனும் மிக ஆழமான இ பலமான சந்தேகம் எமக்குள்ளது.
இப்பொழுது வணக்கத்துக்குரிய ஆயரால் அதிபர், பிரதி அதிபர் முதலிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள் அவரின் ஆதரவாளர்கள் என்பதுடன் முன்னாள் அதிபர் திருமதி சிராணி மில்ஸ் அம்மையார், பாடசாலைக்குள் முறைகேடாக செயற்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபொழுதெல்லாம் அதனை பல்வேறு யுக்திகள் மூலம் தடுத்து பாடசாலையின் ஒழுக்கச்சீரழிவுக்கும் கல்விச்சீரழிவுக்கும் காரணமானவர்களாகவுமுள்ளனர்.
12.09.2016 (திங்கட்கிழமை) அன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நாம் மேற்படிவிடயங்களின் கடுமையான தாக்கங்கள் கருதி வணக்கத்துக்குரிய ஆயரிடம் விளக்கியபோது இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் மறுசீரமைப்புக்களும் நடைமுறைக்கு வரும் என நாம் நம்பிக்கைகொள்ளும் வகையில் அவரது பதில்கள் அமையவில்லை.
மேலும் அவர் 12.09.2016 (திங்கட்கிழமை) மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகங்களுக்குக் கூறியதாக 13.09.2016 (செவ்வாய்க்கிழமை) வெளியான தகவல்களில், தன்னுடனான எமது சந்திப்பை தொடர்சியானதும் நீடித்த பேண்தகு மாற்றங்களையும் மறுசீரமைப்புக்களையும் ஏற்படுத்துவற்கான ஆரம்பம் எனக்கருதாமல் எமது கோரிக்கைகள், ஏனைய விடயங்கள் தொடர்பில் நடைமுறையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார் என்பது தொடர்பில் விபரிக்காமல் போலியான வகையில் பொய்யான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளார்.
மேலும் மாணவிகள் அகிம்சை வழியிலான போராட்டத்தை நடத்திய காலத்திலும் முன்னரும் இனிமேலும் மாணவிகளின் உடல், உளப் பாதுகாப்புக்கு தீவிரமான பாதிப்புக்களும் சவால்களும் அச்சுறுத்தல்களும் உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்தன என்றும் இப்பொழுதும் இருக்கின்றன எனவும் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் செயற்குழு கூறிய விடயங்களின் பாரதூரமான நிலைமைகளைக் கருத்தில் எடுக்காமல், வெறுமனே மாணவர்களின் வரவுக்காக ஊடகங்களின் ஊடாக அழைப்புவிட்டுள்ளார்.
பாடசாலையின் அகச் சூழ் நிலைமையை மிக ஆழமாகவும் துல்லியமாகவும் அறிந்து வைத்துள்ள பெற்றோராகிய நாம் இன்னும் இம்மகளிர் பாடசாலை மாணவிகளுக்கு பாதுகாப்பற்றது என்றே கருதுகிறோம்.
இக்கோரிக்கைகள் இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மேதகு ஜனாதிபதி, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர், அமைச்சர் வாரியம், வடக்கு மாகாணசபையின் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், ஏனைய கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், சமய, சமூகத் தலைவர்கள், கல்விமான்கள், தொழில்வாண்மையாளர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீனத்தின் வணக்கத்துக்குரிய ஆயர் டானியல் தியாகராஜா ஆகியோரின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.
உரிய விசாரணைகள், பொருத்தமான கட்டமைப்பு மற்றும் ஆளணி மாற்றங்கள், சீராக்கங்கள் மாணவர்களுக்குரிய உடல்-உள ரீதியான பாதுகாப்பான சூழல் ஆகியன உடுவில் மகளிர் கல்லூரியில் உறுதியாகும் வரை இலங்கை அரசாங்கத்தின் மேதகு ஜனாதிபதி, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வட மாகாண சபையின் கௌரவ முதலமைச்சர், அமைச்சர் வாரியம், ஏனைய கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபையின் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், சமய, சமூகத் தலைவர்கள், கல்விமான்கள், தொழில்வாண்மையாளர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் யாழ். ஆதீனத்தின் வணக்கத்துக்குரிய ஆயர் டானியல் தியாகராஜா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் நாம் தயாராக இருக்கிறோம்.
ஆகவே பாடசாலையின் மாணவிகளுக்கான உடல்-உள ரீதியான பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை மதிப்புக்குரிய பெற்றோர் தமது பெண்பிள்ளைகளை அப்பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.