உடுவில் மகளிர் கல்லூரி அரச பாடசாலையாக சுவீகரிக்கப்படும்

நிர்வாகம் சுமூகமான தீர்வினை எடுக்காவிடின் உடுவில் மகளிர் கல்லூரியை அரச பாடசாலையாக சுவீகரிப்பதற்கு வடமாகாண சபை அரசாங்கத்திடம் கோரும் நிலை ஏற்படுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக முன்னாள் அதிபரை மாற்றுவதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர், நிலமைகளை ஆராய்ந்த பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரவிக்கும் போது,

அதிபர் நியமனம் குறித்து பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டுமென்று தென்னிந்திய திருச்சபை பேராயர் தலைமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிபர் நியமனத்தினை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தினை மேற்கொண்ட போது, மாணவிகளை ஆண் பொலிஸார் தாக்கியுள்ளார்கள். ஜனநாயக போராட்டத்தினை மேற்கொண்ட மாணவிகள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது. உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகளை பொலிஸார் தாக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மாணவிகளை அநாகரீகமான வார்த்தையினால் பொலிஸார் பேசியதுடன், அவர்களை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

மாணவிகள் நீதிபதியிடம் தமது பிரச்சினைகளை முறையிட்டுள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் நீதிபதி வருகை தந்து விசாரணைகளை நடாத்தி வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

அந்தவகையில், மாணவிகளின் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடாத்தி அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது இருக்கின்றது.

அதேவேளை, மாணவிகளின் போராட்டத்தின் பின்னர் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா எதிர்வரும் திங்கட்கிழமை வரை பாடசாலையினை திறக்க வேண்டாமென கோரிக்கை விடுத்திருந்தும், அந்த கோரிக்கையினை உதாசீனம் செய்துவிட்டு, தற்போதைய நிர்வாகம் பாடசாலையினை திறந்து வைத்துள்ளது.

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. இந்த நிலமை மாற்றப்பட வேண்டும் இந்த நிலமை தொடர்ந்தால், மிகவும் பாரதூரமான நிலமை ஏற்படப்போகின்றது.

எனவே, குறித்த பாடசாலையினை அரச பாடசாலையாக சுவீகரிப்பதற்கு அரசாங்கத்திடம் வடமாகாண சபை கோர வேண்டிய நிலமை ஏற்படும். எனவே, முன்னாள் அதிபரை ஆகக்குறைந்தது ஒரு வருடத்திற்கு சரி கடமையில் அமர்த்தி விட்டு பின்னர், மாற்றுவதற்கான நடவடிக்கையினை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts