உடுவில் பிரதேசத்தின் தனிமைப்படுத்தல் நீக்கம்

உடுவில் பி்ரதேச செயலக பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டு குறித்த பிரதேசம் விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்பட்டிருக்கும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களது குடும்பத்தையும் அவர்களுடன் தொடர்புடையோரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு முதல் முடக்கப்பட்டன.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 30 கிராம அலுவலகர் பிரிவுகளில் 28 பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உடுவில் பிரதேச செயலக பிரிவை விட தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் அதிக தொற்றாளர்கள் உள்ளமை கண்டறியப்பட்டது.

இதனால் உடுவில் பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நேற்றிரவு முதல் நீக்கப்பட்டு முடக்க நிலை விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என 398 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் எந்தவொரு காரணத்துக்காகவும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீட்டுத் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்துவதான் எந்த ஒரு பிரதேசமும் முடக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் கேட்டுள்ளார்.

Related Posts