தாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக அந்த முகாமில் உள்ள வலி.வடக்கு மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
வலி.வடக்கில் சொந்தக் காணியில்லாதவர்களையே மாவை கலட்டியில் உள்ள அரச காணியில் குடியேறுமாறு நலன்புரி நிலைய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வலி.வடக்கு, பலாலியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கடந்த 24 வருடங்ளாக உடுப்பிட்டியிலுள்ள தனியார் காணியில் நலன்புரி நிலையம் அமைத்துத் தங்கியுள்ளனர். தற்போது 14 குடும்பங்கள் அந்த நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன.
குறித்த குடும்பங்களுக்குக் கடந்த வாரம் மாவை கலட்டியில் அரச காணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, குறித்த காணியை அரச அதிகாரிகள் கொண்டு சென்று காண்பித்துள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் தலா 2 பரப்பு வீதம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது உடுப்பிட்டியில் மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திலிருந்து 14 குடும்பங்களையும் வெளியேறுமாறு அரச அதிகாரிகளும், இராணுவத்தினரும் நிர்ப்பந்தித்து வருவதாக நலன்புரி நிலைய மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மாவை கலட்டியில் அடையாளம் காட்டப்பட்ட காணியில் குடியேறுமாறு அரச அதிகாரிகளும், இராணுவத்தினரும் கடந்த சில தினங்களாகத் தம்மை வற்புறுத்தி வருவதாகவும் அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தாம் தமது சொந்த நிலங்களிலேயே குடியமர்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளிடம் கேட்ட போது, குறித்த நலன்புரி நிலையத்தில் 14 குடும்பங்கள் மாத்திரம் தங்கியுள்ளன. அவர்களில் 8 பேருக்குக் காணிகள் எதுவுமில்லை.
எனவே காணியில்லாதவர்களையே மாவை கலட்டியில் குடியமருமாறு கேட்டதாகவும், அத்துடன் காணி உரிமையாளர் குறித்த காணியை விடுவித்து தருமாறு அழுத்தம் தருவதால் அந்த மக்கள் இடமாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.