உடுப்பிட்டியில் முகாமில் தங்கியுள்ள வலி. வடக்கு மக்களை வெளியேறுமாறு காணி உரிமையாளர் தாக்குதல்!

mallakam_campவலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டி மத்திய முகாமில் நீண்டகாலமாக உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்த காணி உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இந்த முகாமில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் வயோதிபப் பெண் ஒருவர் தலையில் காயமடைந்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வலி.வடக்கு பலாலி, தையிட்டி, மயிலிட்டிப் பகுதி மக்களின் காணிகளை இராணுவத்த்தினர் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்கிருந்து இடம்பெயர்ந்த ஒரு தொகுதி மக்கள் உடுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் முகாமிட்டு தங்கியுள்ளனர்.

கடந்த 23 வருடங்களாக மேற்படி முகாமில் 20 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர்வரை வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் அங்கு வந்தவர்கள் தாங்கள் தான் குறித்த முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் என்று தெரிவித்தனர்.

குறித்த முகாம் அமைந்துள்ள காணி தமக்கு தேவையாக உள்ளது என்றும், இதனால் இங்குள்ள மக்கள் வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் தொடர்ச்சியாக முகாங்களுக்கு வந்த அவர்கள் 2 வார கால அவகாசத்திற்குள் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறும், இல்லையேல் விபரீதங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த முகாம் மக்கள் கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.சிவசிறியிடம் முறைபாபாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குறித்த முகாமிற்கு மீண்டும் வந்த அதே நபர்கள் அங்கிருந்த குடிசைகளை பிடுங்கி எறிந்து விடுவோம் என்று மிரட்டியதுடன், முகாம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத்தலைவர் எஸ்.சஜீவன் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக முகாமில் உள்ள மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு வல்வெட்டித்துறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

மேற்படிச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முகாம் மக்கள் தெரிவிக்கையில்.

எங்கள் வளமிக்க காணிகளையும் வீடுகளையும் அபகரித்து அங்கு இராணுவத்தினர் உள்ளனர். அனைத்தையும் இழந்து ஒரு நேர உணவுக்கு கூட வழியற்றவர்களாக நாங்கள் இருக்கிறோம்.

அடுத்தவனின் காணிக்குள்ள இருந்து தினந்தினம் ஏச்சுக்களும், அடிகளும் வாங்கிக் கொண்டு இருக்கின்றோம். எங்களை எங்களுடைய பகுதிகளில் சென்று குடியேற விடுங்கள் வேறு ஒன்றும் எமக்குத் தேவையில்லை என்றனர்.

காணி உரிமையாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் இது குறித்து தெரிவிக்கையில்,

யுத்தம் காரணமாக இங்கிருந்து வெளியேறிய நான் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் வந்தேன். யுத்தம் முடிவடைந்து விட்டது. மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நலைமை சுமுகமாக உள்ளது என்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் செய்யும் பிரச்சாரங்களை நம்பியே நான் எனது சொந்த இடத்திற்கு வந்தேன்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால் எனது காணியில் இன்னும் இடம்பெயர்ந்த மக்கள் வாழந்து வருகின்றனர். குறித்த முகாம் உள்ள பகுதியிலேயே என்னுடைய வீடும் உள்ளது.

தற்போது எனக்கு இருக்க வீடு இல்லை. என்னுடைய காணிக்குள் முகாமிட்டு உள்ள மக்கள் வெளியேறினால் மட்டுமே நான் எனனுடைய வீட்டில் வாழ முடியும்.

என்னுடைய காணியில் உள்ள மக்களை வெளியேற்றி அவர்களுடைய இடங்களில் குடியேற்ற வேண்டும், இல்லையேல் அவர்களுக்கு ஏற்ற வேறு காணிகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நான் என்னுடைய சொந்த இடத்திற்குச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

Related Posts