நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து மதிப்பான முறையில் பதவிகளை உடன் துறந்து வெளியேறுமாறு மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது சகாக்களுக்கும் அவசர ஆலோசனை வழங்கியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
காலியில் நேற்றுமாலை நடைபெற்ற ‘நீதிக்கான மக்கள் குரல்’ பேரணியில் கலந்துகொண்ட அவர், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்டப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நான் காலிக்கு வந்திருந்த வேளையிலேயே அவசரமாக தலைமை அமைச்சர் பதவியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அது சட்டத்துக்கு முரணான நடவடிக்கை என அன்றே நான் கூறியிருந்தேன். எனினும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தை நாடினோம். எமக்கு இடைக்கால நீதி கிடைத்துள்ளது. இன்று நான் காலியில் இருக்கும்போதே அந்த நற்செய்தியும் வெளியானது.
ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து கௌரவமான முறையில் பதவிகளை விட்டுச் செல்லுமாறு மகிந்த ராஜபக்சவிடமும் அவரது சகாக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அரசமைப்பின் பிரகாரம் செயற்பட முன்வருமாறு அனைத்துத் தரப்புக்கும் அழைப்பு விடுக்கின்றேன் – என்றார்.