ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 46 வயதான இன்ஜமாம் உல்-ஹக் நிருபர்களிடம் கூறும் போது,
‘பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் தேர்வாளர் பணியை ஏற்பது இதுவே முதல் முறையாகும். உடனடியாக மாயாஜாலம் (வெற்றிப்பயணம்) காட்டுவதற்கு என்னிடம் எந்த மந்திர கோலும் இல்லை. வலுவான பாகிஸ்தான் அணியை உருவாக்க நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி இருக்கிறது.
எனவே அணி பழைய நிலைமைக்கு திரும்பும் வரை ரசிகர்கள் பொறுமை காப்பது அவசியம். இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு சரியான கலவையில் நம்பிக்கையான அணியை தேர்வு செய்வதே எனது உடனடி பணியாகும். பொறுமையாக இருப்பதன் மூலமே சிறந்த முடிவை பெற முடியும். அணித்தேர்வில் கேப்டனுக்கு முக்கிய பங்கு உண்டு. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சொல்லும் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’ என்றார்.
முன்னாள் வீரர்கள் வாசீம் ஹைதர், வஜஹத் உல்லா வாஸ்தி, தவ்சீப் அகமது ஆகியோர் தேர்வு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.