உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!!

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதில் மிக முக்கியமாக உக்ரைன்- ரஷ்யா போர் குறித்த விவாதம் இடம்பிடித்தது. ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொளி வாயிலாக இன்று கலந்துகொண்டு பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா, ஜி-7 மாநாட்டில் ரஷ்யா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷ்யாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்யா மீது இந்தியா அழுத்தம் தர வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது போருக்கு உதவுவது போன்றதென ஐரோப்பிய நாடுகள் விமர்சித்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்குகிறது? இதற்கு அர்த்தம் ரஷ்யாவின் போருக்கு ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்வதென அர்த்தமாகுமா என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

அதேசமயத்தில் இந்தியா ரஷ்யா மீது சர்வதேச அளவில் அழுத்ததை தர வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி பைடன் புடினுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியா உட்பட எல்லா நாடுகளும் இதில் ஒத்துழைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts