ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், நாடுபூராகவும் பல வேலைத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி காலை 07.00 மணியளவில் விஷேட சமய வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒரு வருடப் பூர்த்திக்கான பிரதான நிகழ்வு பிற்பகல் 02.00 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால் கிருஸ்ணா காந்தி விஷேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொது மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் வகையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற வேலைத் திட்டம் கோட்டை ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டை ஶ்ரீ நாக விஹாரைக்குச் சென்று மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரருக்கு மலரஞ்சலியும் செலுத்தவுள்ளார்.
இது போன்ற பல நிகழ்வுகள் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.