உங்களால் முடியாவிட்டால் போங்கள்’: கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் மீது காட்டம்!

கூட்டமைப்பின் தலைமையை ‘உங்களால் முடியாவிட்டால் அரசியலை விட்டுப் போங்கள்’ என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.

வவுனியா, பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது விடுதலை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்ட போது இந்த போராட்டத்தை ஒரு விடுதலைப்போராட்டமாக வெளியுலகிற்கு கொண்டு சென்றதோடு இப்போராட்டத்தை பயங்கரவாதமாக கொச்சைப்படுத்த எண்ணிய தரப்பிற்கு சவாலாகவும் இருந்தது.

ஆயுதப் போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளிற்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களிற்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும்.

இலட்சக்கணக்கான மக்கள் உயிரைக்கொடுத்தது ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல அவ்வாறெனின் எப்பொழுதே இலட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

இன்று இப் போராட்டம் சரணடையாது உயிர்போனாலும் பரவாயில்லை என்று முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல.

எங்களிற்கென்று ஒரு அணுகுமுறை இருக்கு நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் இருக்கின்றது. உங்களுக்கு முழங்கால் இட்டுக் கெஞ்சிக்கொண்டு போவதுதான் பாதையென்றால் நீங்கள் இதை விட்டு போங்கள்.

எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள். தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts