உக்ரைன்-ரஷ்ய போர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனில் தொடரும் போர் மற்றும் நெருக்கடிகள் உலகளவில் தொழிலாளர் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதன் காரணமாக மந்தநிலை நிலவி வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கில்பர்ட் ஹூங்போ செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,“சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, கடந்த மாதங்களில் உலகளாவிய தொழிலாளர் சந்தைகளுக்கான கண்ணோட்டம் மோசமடைந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் உலகளாவிய வேலைவாய்ப்பு வளர்ச்சி கணிசமாக மோசமடையும், அத்துடன் வேலையின்மை அதிகரிக்கும்.
தற்போதைய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரிப்பதுடன் பணவீக்கம் மற்றும் உலகளாவிய மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஆகியவற்றிற்கு மத்தியில், வேலைவாய்ப்பு உருவாக்கம், வேலைகளின் தரம் இரண்டும் குறைவடைகின்றது.
மேலும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய வேலைகளின் எண்ணிக்கை சுருங்கி வருவதுடன், பணவீக்கம் அதிகரித்து வருவதால், பல நாடுகளில் உண்மையான ஊதியங்கள் வீழ்ச்சியடைகின்றன.
இதேவேளை போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 24 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளனர்.”என தெரிவித்துள்ளார்