உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு வருகைதந்த போது, யுரேனியச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அவா் அறிவித்தாா்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு புதிதாக அளிக்கவிருக்கும் இராணுவ உதவிகளின் ஒரு பகுதியாக இந்த குண்டுகள் அனுப்பப்படவுள்ளன.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது சக்திவாய்ந்த எம்-1 அப்ரம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அந்த பீரங்களில் பயன்படுத்துவதற்காகவே யுரேனிய சக்கையால் தயாரிக்கப்பட்ட 120 எம் எம் குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, உக்ரைனுக்கு யுரேனிய சக்கையால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை அளிக்கவிருப்பதாக பிரிட்டன் கடந்த மாா்ச் மாதம் அறிவித்ததற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
‘எங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, சா்ச்சைக்குரிய யுரேனிய சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி எதிா்ப்பு குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு ரஷ்ய – பிரிட்டன் தூதரக உறவு அளவிலும் கடுமையான எதிா்விளைவுகளை ஏற்படுத்தாமல் போகாது. இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்’ என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறுகையில், ‘யுரேனியப் பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதன் மூலம், இந்தப் போரை ஒரு புதிய ஆபத்தாக கட்டத்துக்கு பிரிட்டன் இட்டுச் செல்கிறது’ என்றாா்.
இந்த நிலையில், யுரேனிய சக்கையால் உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அமெரிக்காவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.