உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, 93.11 சதவீத வாக்காளர்கள் ரஷ்ய இணைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், இது ஒரு முதற்கட்ட முடிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள கெர்சனில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, 87.05 சதவீத வாக்காளர்கள் ரஷ்ய இணைப்பிற்குத் தேர்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில், 91.2 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மையானவர்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவளித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உக்ரைன் அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளால் இந்த வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பலாத்காரத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இணைக்க முயற்சிப்பதன் மூலம் ரஷ்யா ஐ.நா. சட்டத்தை கொடூரமாக மீறுகிறது என்று குற்றம் சாட்டினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் நடக்கும் இந்த கேலிக்கூத்து பொதுவாக வாக்கெடுப்பின் பிரதிபலிப்பு என்று கூட சொல்ல முடியாது என்று அவர் செவ்வாய் இரவு தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள ஆண்களை தங்கள் சொந்த தாய்நாட்டிற்கு எதிராகப் போரிட அனுப்புவதற்காக ரஷ்ய இராணுவ அணிதிரட்லுக்கு கட்டாயப்படுத்துவது மிகவும் இழிந்த முயற்சியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts