ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்ட வேண்டுகோளை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், ‘ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பெயரை அக்கட்சி சார்ந்தவர்கள் அல்லது, கட்சி சாராதவர்கள் அநாமதேயமாக பாவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், ‘அவ்வாறு எமது கட்சியின் பெயரைப் தவறாகப் பயன்படுத்தி ஏதாவது செயற்பாடுகள் செய்தால் அவ்வாறான விடயங்களில் தான் தலையிட மாட்டேன். இதுவரையில் நடைபெற்ற பல சம்பவங்களிலும் தான் தலையிடவில்லை’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.