ஈ.பி.டி.பி. அலுவலகம் முன் தேர்தல் விதிமுறை மீறல், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் முறைப்பாடு

thuvareswara-makesswaran-UNPயாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கு முன்பாக திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்.மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரிடம், ஐ.தே.க. முதன்மை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்.நகரின் முக்கிய வீதியான ஸ்ரான்லி வீதியில் குறித்த கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால், வீதியின் இரு பக்கமும் வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வீதித்தடை ஏற்படுத்தப் பட்டுள்ளமையால், குறித்த வீதியூடாக வேட்பாளர்கள் சென்று வரும் போது,
அவதானிப்பதற்கும் ஏதேனும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கும் சாத்தியம் உள்ளதாக துவாரகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளுடன் நடத்திய கூட்டத்தில் தேர்தல் காலத்தில் வீதிகளில் விளம்பரங்களோ, வேகத் தடைகளோ ஏற்படுத்தக் கூடாதெனத் தெரிவித்திருந்தமையையும் சுட்டிக் காட்டியுள்ள அவர் மேற்படி வேகத்தடை வடமாகாண சபைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் பின்னரே அமைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த முறைப்பாடு தனக்கு கிடைத்துள்ளமையை உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சி.அச்சுதன் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்கும் ஈ.பி.டி.பிக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்தார் அரசு சார்பில் அந்தக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இடத்தில் சில தினங்களுக்கு முன்னர் விபத்து இடம்பெற்றமையால் அபிவிருத்தித் திணைக்களம் அதனை அமைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts