எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி) அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் புதன்கிழமை (24) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
கடந்த, 1995இல் இந்த நாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வை பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பேச முடிந்தது. இன்று துரதிஸ்டவசமாக இனப்பிரச்சினை நாட்டின் பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் போய்விட்டது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்குதல், சகல இன, மத சமூகங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் உருவாகுதல், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது முழுமைப்படுத்தலுடன், அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு, ரத்துச் செய்யப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீளக்கொண்டு வருதல் மூலம் சுதந்திரமான பொலிஸ் சேவை, நீதிச் சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படவேண்டும் என நாம் உணர்கின்றோம்.
ஊழலற்ற, பாரபட்சமில்லாத, மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நிலவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
மேற்படி எதிர்பார்ப்புக்களுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கவுள்ளோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.