எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக யாழ். மாவட்ட இணை செயலாளர்களான சிவகுரு பாலகிருஷ்ணன், மற்றும் ஜயாத்துரை ஸ்ரீ ரங்கேஷ்வரன் ஆகியோர் கூறி யுள்ளனர்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) காலை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் சிவகுரு பாலகிருஷ்ணன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து நின்று வீணை சின்னத்தில் போட்டியிட உள்ளது. 1998ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்னணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசியலில் போட்டியிட்டோம். இன்றைய சூழ்நிலையில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்.
உலகில் பெரும் மோசடியான மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட நல்லாட்சி எனக் கூறப்படும் அரசாங்கத்தோடு கூட்டு சேர விரும்பவில்லை. அதனாலேயே தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். என்றாலும் கூட மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுய ஆட்சி எனும் கொள்கையில் மாற்றமில்லை.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டமானது தோல்வி அல்லது எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை.
இதனால் அரசியல் கைதிகளின் கோரிக்கை வெற்றியடையவில்லை. அதற்கு காரணம் அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பாராமுகம் ஆகும். நல்லாட்சி அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் காத்திரமான நடவடிக்கையினை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.