ஈழ அகதி தற்கொலை: அரசின் மனித நேயமின்மையே காரணம்

ஈழ அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமைக்கு, தமிழக அரசின் மனித நேயமின்மையே காரணம் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில்,

“’மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கிராமத்தில் உள்ள முகாமைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அகதி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மின்சாரக் கம்பத்தில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், வருத்தமும், துயரமும் அளிக்கிறது. நம்பி வந்த அகதிகளின் உயிரைக் காக்கத் தவறியதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் சில அதிகாரிகளின் மனிதநேயமற்ற அணுகுமுறை தான் இலங்கை அகதி ரவிச்சந்திரனின் தற்கொலைக்கு காரணம் ஆகும். கூத்தியார்குண்டு முகாமிலுள்ள அகதிகளை கணக்கெடுக்கும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முகாமில் நேற்று கணக்கெடுப்புக்காக சென்ற வருவாய் அதிகாரி ஒருவர், ரவிச்சந்திரன் முகாமில் இல்லாதது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் உடல்நலம் பாதித்த பேரனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்ததால் தாமதமானதாக கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அதிகாரி, ரவிச்சந்திரனின் பெயரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ முடியும்? என்று ரவிச்சந்திரன் கேட்ட போது, வாழ வழியில்லை என்றால் மின்சாரம் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொள் என்று திமிராகக் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மின் கம்பியை கால்களால் மிதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இலங்கைப் போரில், உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தங்களின் உடமைகளையெல்லாம் இழந்து அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களை தொப்புள் கொடி உறவுகளாக கருதி அரவணைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தமிழக அரசு மனிதநேயமின்றி அவர்களை வேண்டாத விருந்தாளிகளாகவும், கூடுதல் சுமையாகவும் கருதுவதன் விளைவு தான் ஓர் அப்பாவி உயிரை மாய்த்துக் கொண்டதில் முடிந்திருக்கிறது.

அரசின் தவறான அணுகு முறையால் அகதிகள் உயிரை மாய்த்துக் கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டும், மர்மமான முறையிலும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப் படவில்லை. இலங்கைத் தமிழ் அகதிகளை மனிதர்களாக பார்க்காமல் விலங்குகளை விட கேவலமாக தமிழக அரசு கருதுவதே இதற்கு காரணம்.

அகதிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்; செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடி அங்குள்ள இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இப்போதைய அதிமுக அரசும், முந்தைய திமுக அரசும் இக்கோரிக்கையை காதில் போட்டுக் கொள்வதே இல்லை. மாறாக அங்குள்ள அகதிகளை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்குவதில் தான் காவலர்கள் இன்பம் காண்கின்றனர். காவல்துறையினரின் கொடுமைகளை தாங்க முடியாமல் சசிகரன் என்ற அகதி நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றார். செந்தூரன் என்ற அகதி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல முறை சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் அவரது போராட்டத்துக்கு பணிந்து 17 அகதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும், மீதமுள்ள ஈழ அகதிகள் மீதான கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

முகாம்களிலும், சிறப்பு முகாம்களிலும் இழைக்கப்படும் கொடுமைகள், முகாமை விட்டு வெளியேறி சுதந்திரமாக வாழ முடியாத அவலம் ஆகியவற்றை சகித்துக் கொள்ள முடியாத அகதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து அவுஸ்திரேலியாவில் குடியேறும் நோக்குடன் படகுகள் மூலம் பயணம் மேற்கொள்வதும், பயணத்தின் போது படகு கவிழ்ந்து இறப்பதும் வாடிக்கையாகிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று 600க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலரின் உயிரிழப்பு வெளி உலகத்துக்கு தெரியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் காரணம் ஈழ அகதிகளை அகதிகளாக பார்க்காமல் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அரசு பார்ப்பது தான்.

2011-ஆம் ஆண்டுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இலங்கை தமிழ் அகதிகள் கௌரவமாக வாழ வகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் அடங்கிய அகதிகள் சிறப்பு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அத்தகைய திட்டம் செயல்படுத்தப் படாததால் மறு வாழ்வு தேடிய அகதிகள் இருக்கும் உயிரை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மின்சார கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழ் அகதிகளின் உயிரிழப்புக்கும் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

போர் உள்ளிட்ட காரணங்களால் தஞ்சம் தேடி வரும் அகதிகளை உள்நாட்டு குடிமக்களைப் போல நடத்த வேண்டும் என ஐ.நா கூறுகிறது. ஆனால், ஈழத் தமிழ் அகதிகளின் நலனுக்காக சட்டம் கூட தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீன அகதிகளும், திபெத் அகதிகளும் கௌரவமாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது. திபெத் அகதிகளுக்கு கூட்டுறவு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொடைக் கானல் போன்ற பகுதிகளில் அவர்கள் வணிகம் செய்ய உதவிகள் வழங்கப் பட்டிருக்கின்றன. பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்குக் கூட சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நமது சொந்தங்களாக ஈழ அகதிகளை குற்றவாளிகளைப் போலவே ஆட்சியாளர்கள் பார்க்கின்றனர்.

இந்த நிலை மாற்றப்பட்டால் தான் இலங்கை அகதிகள் தமிழகத்தில் சுய மரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ முடியும். பாட்டாளி மக்கள் கட்சி அரசு அமைந்தவுடன் ஈழத் தமிழ் அகதிகளின் குறைகள் தீர்க்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படும் என உறுதியளிக்கிறேன்.’’

Related Posts