இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் (மருத்துவம்) சேருவதற்கு ஏதேனும் இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விருப்பம் உள்ளதா என, இந்திய மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பத்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.ஸ்ரீ பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் திகதி பத்திரிகையில் ஒரு செய்தி படித்தேன்.
அதில், இலங்கை தமிழ் அகதி என்ற ஒரு காரணத்துக்காக ஆர்.நந்தினி என்ற மாணவி கடந்த கல்வி ஆண்டில் (2014-2015) கலந்தாய்வில் பங்கேற்பதற்கு நிராகரிக்கப்பட்டார் என செய்தி வெளியானது.
நந்தினியின் தந்தை டி.ராஜா கடந்த 1990-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்தார்.
நந்தினி அந்த மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பை முடித்து, 1200-க்கு 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அவரது கட் ஆஃப் மதிப்பெண் 197.5 ஆக உள்ளது.
ஆனால், அவரது விண்ணப்பம் கடந்த கல்வி ஆண்டு (2014- 2015) நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை தமிழ் அகதி நந்தினியை எம்.பி.பி.எஸ். மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
மேலும், அவருக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெயில், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, மத்திய அரசின் வெளியுறவுத் துறை, உள்துறை, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.
அதில், இலங்கை உட்பட நட்புறவு வெளி நாடுகளுக்கென மருத்துவ படிப்பின் சுய நிதித் திட்டத்தின் கீழ் சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், அந்த இடஒதுக்கீட்டில் அகதிகளின் வாரிசுகள் படிப்பதற்கு உரிமை இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு ஏதேனும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு விருப்பம் உள்ளதா என்பது குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விளக்கம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜூன் 26-ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.