வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரான கந்தசாமி கமலேந்திரன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியல் றெக்சியனின் கொலை தொடர்பில், கந்சாமி கமலேந்திரன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதால், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை பீடம் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் எவராயினும், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எவராயினும், அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் படுகொலையானது, தனிப்பட்ட முரண்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற படுகொலை சம்பவங்களை கட்சியின் தலைமை ஒருபோதும் அனுமதித்திருந்ததோ அல்லது நியாயப்படுத்தியதோ இல்லையென சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சி, உறுப்பினர்கள் மத்தியில் காணப்படுகின்ற முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்பட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.