ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை இராதாகிருஷ்ணன் நல்லைக்கந்தன் திருவடியில் இன்று காலமானார்.

10653288_964730333569794_6171058367458841726_nஇன்று (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் காலமாகி விட்டதை மருத்துவர்கள் அங்கே உறுதிசெய்தனர்.

மிடுக்கான கலைஞன். எதையும் வெளிப்படையாகக் கூறும் துணிச்சல் கொண்ட கலைஞன்.  சாதனைக் கலைஞன். சரித்திரம் படைத்த கலைஞன். ஒரு இரவில் நான்கு அல்லது ஐந்து மேடைகள் கண்ட ஒப்பற்ற ஆற்றுகைக் கலைஞன். இசைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் கலைஞன். எண்ணற்ற மாணவர்களை உருவாக்கிய பேராசான். எப்பொழுதும் இசை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் கலைஞன்.

 

ஈழத்தின் செவ்விசை வரலாற்றில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளிற்கும் மேலாகப் பக்கவாத்திய, தனியிசைக் கலைஞராகப் பணியாற்றி இரண்டாயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்ட மாபெரும் வயலின் கலைஞராக விளங்குபவர் இசைஞானதிலகம் உ.இராதாகிருஷ்ணன்.

அமரர் உருத்திராபதி – திருமதி தையலாம்பாள் தம்பதியரின் மகனாக 27.06.1943இல் இணுவில் என்னும் கலையெழில் சூழ்ந்த சிற்றூரில் இவர் பிறந்தார். இணுவில் மஹாஜனாக் கல்லூரியிலும் யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் பல்துறைக் கலைஞராக விளங்கிய தனது தந்தையிடமே குரலிசையையும் விரலிசையையும் கற்றுக்கொண்டார்.

சிறு வயதிலிருந்து வயலின் இசையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த இவர் நாதஸ்வரக் கலையிலும் தேர்ச்சி கண்டார். இசையையே தொழிலாகக் கொண்ட இவரது தந்தை மற்றும் உறவினர்களின் வழிகாட்டுதல்களால் இசை ஆளுமையும் ஆற்றுகைத்திறனும் கொண்ட முழுநேர வயலின் கலைஞராகச் சிறு வயதிலேயே உருவாக்கப்பட்டார்.

அக்காலத்தில் இசைச் சொற்பொழிவு வல்லவர்களாக விளங்கிய தமிழறிஞர் கணேசசுந்தரம், லயமேதை மணிபாகவதர் போன்றோரது நிகழ்வுகளிலும் திருமுறையிசை அரங்குகளிலும் கண்ணன் மெல்லிசைக் குழுவில், பாடகர் கிருஷ்ணமூர்த்தி பக்திப்பாடல் கச்சேரிகளிலும் சிறப்புறத் தனது வயலின் இசையை வழங்கிவந்தார்.

எனினும் தனது இசையறிவை மேலும் வளர்த்துக்கொள்ளும் நோக்கோடு 1968இல் தமிழகம் சென்று வயலின் மேதை பரூர் எம்.எஸ்.அனந்தராமன் அவர்களிடம் வயலின் வாசிப்பு முறையில் கையாளப்பட வேண்டிய நுட்பங்களை இரண்டு ஆண்டுகள் கற்று நாடுதிரும்பித் தன் பணியைத் தொடர்ந்தார். அதன்பின் மீண்டும் 1972இல் தமிழகம் சென்று அனந்தராமன் அவர்களிடம் வயலினையும் தஞ்சாவ+ர் எம்.தியாகராஜன் அவர்களிடம் குரலிசையையும் சில ஆண்டுகள் கற்றுக்கொண்டார்.

இக்காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பல இசை விழாக்களிலும் ஈழத்தின் பெயர் சொல்லும் கலைஞராக சிறப்புற்று விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அடையார் இசைக் கல்லூரி, சென்னைத் தமிழிசைச் சங்கம், திருவையாறு, கும்பகோணம், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்ற பல இசைவிழாக்களில் தனது தனித்துவத்தை நிலைநாட்டினார்.

இவ்வாறு வரன் முறையான கற்றலும் மரபு தவறாத இசை அரங்க அனுபவமும் கொண்ட தன்னிகரற்ற வயலின் மேதையாக ஈழத்தில் காலடி பதித்தார்.
தனியிசைக் கச்சேரிகளை வழங்குவதிலும் தனித்துவமான பாணிகள் கொண்ட பாடகர்களிற்கு அவர்களின் பலம், பலவீனங்களை உணர்ந்து பக்கவாத்திய அனுசரணை வழங்குவதிலும் வல்லவராக விளங்கிய இவர் இலங்கையின் அனைத்துப் பாகங்களிற்கும் சென்று தனது இசை நிகழ்வுகளை வழங்கியவர்.

ஈழத்தின் தலைசிறந்த பாடகர்களாக விளங்கிய அனைவராலும் விரும்பப்பட்டு துணையிசையாளராக அழைக்கப்பட்ட இவர் தமிழகத்திலிருந்து வருகை தந்த பாடகர்களான சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, தஞ்சாவ+ர் ரி.எம்.தியாகராஜன், தஞ்சாவ+ர் எஸ்.கல்யாணராமன், மதுரை சோமசுந்தரம், மஹாராஜபுரம் சந்தானம், எஸ்.இராசசேகரன், ஜெயா விஜயா சகோதரர்கள், காயத்திரி கிரிஷ், அருட்சகோதரி மாக்கிரட் பஸ்ரின் போன்றோரது இசை அரங்குகளையும் தனது இசைத்திறனால் அழகு செய்தவர்.

இவ்வாறு மிகச் சிறந்த ஆற்றுகையாளராக ஈழத்தின் இசை வரலாற்றில் பல ஆண்டுகளாகத் தடம் பதித்து வரும் இவர் ஏராளமான மாணவர்களை உருவாக்கிய ஒப்பற்ற வயலின் ஆசிரியராகவும் இன்று வரை பணியாற்றி வருகின்றார்.

தந்தையிடமும் எம்.எஸ். ஆனந்தராமன், ரி.எம். தியாகராஜன் போன்றோரிடமும் கற்ற கீர்த்தனைகளை, அமைப்பு மாறாமலும் அவற்றின் உயிர் நாடியாக விளங்கும் சங்கதிகளைச் சிறிதளவு கூட மாற்றாமலும் இன்றுவரை வாசிக்கும் நினைவாற்றலும் பாடாந்தர ஒழுக்கமும் கொண்ட இவரிடம் ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்கள் பலர் நுட்பமான கீர்த்தனைகளைத் தெரிவு செய்து கற்று வந்துள்ளனர். இவர்களுள் நாதஸ்வரமேதை வீ.கே.பஞ்சமூர்த்தி அவர்கள் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர் பல்லவி, மல்லாரி போன்ற இசை உருப்படிகளையும் லயக் கணக்குவழக்குக் கோர்வைகளையும் புதிதாக உருவாக்குவதிலும் வல்லவராக விளங்கி வருகின்றார்.

லயவேலைப்பாடுகள் நிறைந்த அரங்காக உருவாக்கப்படும் மிருதங்க, நடன அரங்கேற்றங்களிலும் வயலினிசை வழங்கி வரும் இவரது தனியிசைக் கச்சேரி இறுவட்டுக்கள் “கானாம்ருதம்” என்னும் பெயரில் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்ட சங்கீதப+ஷணம் பொன்.சுந்தரலிங்கத்தின் திருமுறையிசை ஒலிப்பதிவிலும் வயலினிசை வழங்கியிருக்கும் இவர் மலேசியா, சிங்கப்ப+ர், இங்கிலாந்து,கனடா, யேர்மன், டென்மார்க், நோர்வே போன்ற வெளிநாடுகளிலும் தனது இசைக் கச்சேரிகளை வழங்கியுள்ளார். (வசாவிளான் தவமைந்தன்)

ஈழத்தின் இசை வரலாற்றில் சரித்திர நாயகனாக விளங்கிய இந்த மாபெரும் கலைஞனின் புகழ் என்றும் மறையாது. இசையோடு வாழ்ந்த அந்தக் கலைஞன் நல்லைக் கந்தனின் நீழலில் பக்கவாத்தியக் கலைஞர்கள் புடைசூழ்திருக்க அவர் மீட்டிய சுருதியும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க இரசிகர்கள் முன்னிலையில் இறையடி சேர்ந்திருக்கின்றார்.

-த.றொபேட்

Related Posts