ஈராக்கில் ஏற்பட்டுள்ள போரால் அந்நாடு இரண்டாக உடையும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா பிரிவினரின் அரசை எதிர்த்து சன்னி பிரிவின் ISIS தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அங்கு தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ளது. அவர்கள் மோசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் பாக்தாத்தை சுற்றிவளைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் உள்ள அரசியல் மற்றும் மத தலைவர்கள் கலவரத்தை தூண்டும் செயலை கைவிட வேண்டும் என்று ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் ஈராக் இரண்டாக உடையும் அபாய நிலை உருவாகும் என்று ஐ.நா.சபை எச்சரித்துள்ளது.