ஈராக் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களை ஏற்றி வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம் இன்று சனிக்கிழமை காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளது.
ஈராக் நாட்டில் மோதல்கள் உக்கிரமடைந்து வரும் சூழலில், ஐசிஸ் பிரிவினரால் பிடித்துவைக்கப்பட்ட 46 இந்திய செவிலியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வருவதற்காக ஒரு சிறப்பு விமானத்தை இந்திய அரசு ஏற்பாடு செய்தது.
நேற்று இரவு இராக் நாட்டில் உள்ள எர்பில் நகர விமான நிலையத்திற்கு சென்றடைந்த அந்த விமானத்தில், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகளும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள சென்றனர்.
எர்பில் நகர விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட சிறப்பு விமானத்தில், 46 இந்திய செவிலியர்கள் உள்ளிட்ட 116 இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர்.
அந்த விமானம் இன்று காலை இந்திய நேரப்படி 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
அந்த 46 இந்திய செவிலியர்களில் பெரும்பாலானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த விமானம் கொச்சி விமான நிலையத்திற்கு முதலில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இறுதியாக இந்த விமானம் இன்று புதுடில்லி விமான நிலையம் வந்தடையும்.
கொச்சி விமான நிலையத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும், கேரளா மாநில முதல்வர் நேரில் ஆறுதல் கூறினார். மீட்கப்படவர்களின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும், அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்தியா திரும்பிய தமிழகத்தை சேர்ந்த செவிலியரான மோனிஷா, கொச்சின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நடந்த விவரங்கள் குறித்து விவரித்தார்.
ஈராக் நாட்டில் உள்ள திக்ரித் நகரில் இவர்கள் தங்கியிருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படமாட்டது என்று முன்னர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலால் அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் அவர்கள் அனைவரும் ஆச்சத்துடன் தங்கியிருந்தாகவும், அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுகொண்டே இருந்ததாகவும் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதலால் அவர்கள் தங்கியிருந்த மருத்துவமனையில் பலரும் காயமுற்றதாகவும், மேலும் அது பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கியதாகவும் தெரிவித்தார் அவர். இந்நிலையில், இவர்கள் அனைவரையும் வலுக்கட்டயமாக தீவிரவாத கும்பல் ஒரு வாகனத்தில் ஏறக்கூறியதாகவும், இவர்களை பாதுக்காக்கும் நடவடிக்கையாக அவர்கள் இதை மேற்கொள்வதாக இவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அதே சமயம் இவர்கள் மொசுல் நகருக்கு அழைத்து வரப்பட்டதால் மட்டுமே இந்தியா திரும்ப முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.