ஈராக்கில் நடந்து வரும் மோதலில் திக்ரித் நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில் சிக்கியிருந்த 46 இந்திய செவிலியர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் குடும்பத்தினர் சிலர் கூறுகின்றனர்.
இது குறித்து இந்திய அரசு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ஈராக் நாட்டில் சிக்கித்தவித்த அனைத்து இந்திய செவிலியர்களும் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக, அவர்களில் ஒருவரது உறவினரான ஜனார்த்தனன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இந்திய நாட்டை சேர்ந்த செவிலியர்கள் 46 பேர் திக்ரித் நகரிலிருந்து, ஐசிஸ் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர்கள் அனைவரும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் எத்தனை பேர் மொத்தத்தில் உள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர்களில் சிலருக்கு மட்டும் ஒரு விபத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதே சமயம் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறினார். இந்திய அரசு அவர்களுடன் தொடர்பில் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை என்றார்.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் திக்ரித் நகருக்கு அருகில் உள்ள மொசுல் நகருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இந்த சமயத்தில் இன்று காலை சிக்கித்தவிக்கும் செவிலியர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் அவரது பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்த செவிலியரின் உறவினரான ஜனார்த்தனன், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக உறுதியாக தெரிவித்தார். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பத் தயராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இருந்த போதும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இது குறித்தான தகவல் எதுவும் அவர்களுக்கு இது வரை தெரிவிக்கப்படவில்லை என்று கூறி வருகிறது.