ஈராக்கிலிருந்து 600 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடுகள்

ஈராக்கில் நெருக்கடி இல்லாத பகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 600 இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் இந்த வாரம் துவங்கும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார்.

Irac

ஈராக்கில் இந்தியத் தூதரகம் மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை முயற்சிகளின் ஒரு பகுதியாக அங்கிருக்கும் இந்தியத் தூதரகத்தின் நடமாடும் அணிகள், பாக்தாத், நஜாப், கர்பாலா மற்றும் பஸ்ரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்தியாவிற்கு திரும்ப விரும்பும் 600 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் இந்த வாரம் துவங்கப்படும் என்றும் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட 39 இந்தியர்களையும் மற்றும் திக்ரித் பகுதியில் சிக்கியிருக்கும் செவிலியர்களையும் மீட்கும் பணி குறித்த விரிவான தகவல்களை பாதுகாப்பு காரணங்களுக்காக அளிக்க மறுத்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், அவர்களை மீட்கும் பணிக்காக இந்தியா எல்லாக் கதவுகளையும் தட்டிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குத் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு நிதி நெருக்கடி இருந்தால், அவர்கள் நாடு திரும்புவதற்கான நிதி உதவியை இந்திய அரசாங்கமே அளிக்கும் என்று வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதரகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் பஸ்ரா பகுதியில் நீதிமன்றக் காவலில் இருக்கும் 6 இந்தியர்களை விடுதலை செய்ய நீதிமன்ற நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாக்தாத், நஜாப், கர்பாலா பகுதளில் உள்ள 94 இந்தியர்கள் இந்தியாவிற்கு புறப்பட்டனர் என்று வெளியுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts