இ.போ.ச – தனியார் பஸ் ஊழியர்கள் கைகலப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள், பேருந்துக்குள் ஏறி சாரதி மீதும் நடத்துனரின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதன்போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில், கிளிநொச்சி பேருந்து சாலையை சேர்ந்த ஊழியர் ஒருவரும், தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் ஊழியர்கள் மீது தனியார் பஸ் சங்க ஊழியர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக கிளிநொச்சி சாலை ஊழியர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts