இ.போ.ச. ஊழியர்களின் போராட்டத்திற்கு பின்னணி யார்?

இ.போ.ச ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தின் பின்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உந்துதலாக உள்ளார்களா எனும் கேள்விக்கு பணிப் பகிஷ்கரிப்பை நடத்திவரும் தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டும் என வ டமாகாண முதலமைச்சரும் மாகாண போக்குவரத்து அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் உத்தரவிட்டதை தொடர்ந்து இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இதன் பின்னணியில் முதலமைச்சருக்கு எதிரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக பகிஷ்கரிப்பை நடாத்திவரும் இரு தொழிற்சங்கங்களிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணன் புவி கூறுகையில்,

இ.போ.ச உழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் பின்னணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஷ்வரனுக்கு எதிரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது உண்மையே.

முதலமைச்சர் சீ.வி.விக்கினேஷ்வரனுக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில் அவரை வீழ்த்தவேண்டும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்புக்கு பின்னால் இருந்து நடத்துவதாக மக்கள் மத்தியில் கருத்து உள்ளது. அதற்கு இணைந்தால்போல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த பணி பகிஷ்கரிப்பின் பின்னால் இருப்பது உண்மையே என அவர் தெரிவித்தார்.

இதே விடயம் தொடர்பாக இ.போ.சபையின் வடபிராந்திய சாலைகளின் இணைந்த தொழிற் சங்க தலைவர் அ.அருளானந்தம் கூறுகையில்,

இ.போ.ச. ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பின் பின்னணியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. அவ்வாறான கருத்து திட்டமிட்டே பரப்பப்படுகின்றது. முதலமைச்சர் சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்கிறார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டபோது வடபிராந்தியத்தில் உள்ள 7 இ.போ.ச. சாலைகளும் முதலமைச்சருக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பு செய்திருந்தமையினை வடமாகாண முதலமைச்சரும் மக்களும் மறக்க கூடாது எமக்கு பின்னால் அரசியல்வாதிகள் இல்லை.

இந்த பணி புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கும் இ.போ.ச. ஊழியர்களுக்குள் பல கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் இடம்பெற்றிருக்கின்றது. எனவே ஒரு கட்சி சார்ந்த தீர்மானங்கள் எதனையும் எங்களால் எடுக்க இயலாது. எனவே எமக்கு பின்னால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாக கூறப்படும் கருத்து பிழையானதும் பொய்யானதும் என்றார்.

Related Posts