இஸ்லாம் காட்டும் தாராளத்தன்மை தேசிய நல்லிணக்கத்திற்கான முன்மாதிரி!

முஸ்லிம்களின் ஆன்மீக கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு போன்றே சமத்துவத்துக்கு வழிகாட்டும் அவர்களது தாராளத்தன்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

இஸ்லாமியர்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தலைப்பிறையினைக் கண்ட பின்பு கொண்டாடும் ஈதுல் பித்ர, பெருநாளானது சமத்துவத்தின் மிகச் சிறந்த செய்தியை உலகுக்கு வழங்கும் மிக முக்கியமான சமய நிகழ்வாகும்.

அஸ்ஸவ்ம் எனப்படும் ரமழான் நோன்பு இஸ்லாம் மார்க்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ள முக்கிய ஐந்து தூண்களில் ஒன்றாகும். பரிசுத்த அல்குர் ஆனும் இந்த மாதத்தியிலேயே இறங்கியது. நோன்பு காலம் மற்றும் பெருநாள் நிகழ்வு என்பன பெறுமதி மிக்க சமய ரீதியான, ஆன்மீக ரீதியான, சமூக ரீதியான பல பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது. அப்பெறுமானங்களைப் பாதுகாக்கும் வகையில் இஸ்லாமியர்களின் நோன்பு காலத்திலும் மிகுந்த இறை நம்பிக்கையுடனும், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் மதக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.

பசியால் வாடும் ஏழை மக்கள் முகங்கொடுக்கும் துன்பங்கள் எவ்வாறானவை என்பதை விளங்கிக்கொள்வதற்கும், அது தொடர்பாக உணர்வுபூர்வமான உள்ளத்துடன் தாராளத்தன்மை மிக்க வாழ்வொன்றை நோக்கிச் செல்வதற்கும், உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பண்பை வளர்த்துக் கொள்வதற்கும் ரமழான் நோன்பு அரிய சந்தர்ப்பமாகும். அந்த சிறப்பான வாழ்க்கை ஒழுங்குகளை ஒரு மாதத்துடன் வரையறுத்துக் கொள்ளாமல் நாளாந்த வாழ்விலும் அவற்றைக் கடைபிடிப்பது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.

இஸ்லாமியர்களின் இந்த அர்ப்பணிப்பு, ஆன்மீகக் கட்டுப்பாடு என்பவற்றைப் போன்றே சமத்துவத்திற்கு வழிகாட்டும் அவர்களது தாராளத் தன்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும். ஏழை, பணக்காரன் என்ற எந்த வித்தியாசமுமின்றி ஒரே மக்களாக ஒன்றிணைந்து நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சகோதர இஸ்லாமியர்ளுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Posts