இழுபறியில் வேம்படி மகளிர் கல்லூரி அதிபா் நியமனம்!

பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் வேம்படி மகளிர் கல்லூரிக்கான புதிய அதிபராக திருமதி வேணுகா சண்முகரட்ணத்தை நியமித்து நியமனக் கடிதத்தையும் வழங்கியிருந்தது.இருப்பினும் பதில் அதிபர் திருமதி ராஜினிமுத்துக்குமாரன் தொடர்ந்து அதிபராக நியமனம் செய்யப்படவேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் தலையீட்டில் அவர் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதனிடையே பழையமாணவிகள் சங்கத்தினையும் இது விடயத்தில் தமக்கு ஒத்துழைப்பு தருமாறு அமைச்சர் கேட்டிருந்தார்.முன்னதாக பழைய மாணவிகள் சங்கத்தின் செல்வாக்கின் காரணமாகவே புதிய அதிபர் நியமனம் இடம்பெற்றிருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.இதன்காரணமாக தற்போதைய பதில் அதிபரை அதிபராக தொடர்வதற்கு ஆதரவு தருமாறும் அவர் சங்கத்துடன் ஒத்துழைப்பினை வழங்குவார் என்றும் அமைச்சர் சங்கத்தினை சமாதனப்படுத்தியிருந்தாகவும் அத்தகவல் மேலும் தெரிவித்திருந்தது.

இது இப்படியிருக்க ஆரம்பத்தில் அனுப்பப்பட்ட நியமன கடிதத்தின்பிரகாரம் நேற்று புதிய அதிபராக பதவியேற்க சென்ற திருமதி வேணுகா சண்முகரட்ணம் பதில் அதிபர் கல்லுாரியில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால் பதவியேற்க முடியாமல் திரும்பி இருக்கின்றார். இதுவிடயத்தில் வடமாகாண கல்வித்திணைக்களம் தமக்கு எதுவும் தெரியாது என கைவிரித்துள்ளது. தேசியப்பாடசாலைகளுக்கான நிருவாகம் மற்றும் அதிபர் நியமனங்கள் மத்திய அரசினாலேயே மேற்கொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக தேசியப்பாடசாலைகளின் அதிபர் நியமனங்களில் அரசியல் மற்றும் பழையமாணவர் மாணவியர் சங்கங்களின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்துவது வழமையான ஒருவிடயம் என்றும் இதுவிடயத்தில் தம்மால் எதுவும் செய்யமுடியாது என்றும் மகாணக்கல்வித்திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.மேற்படி நியமனத்தில் யாருடைய கை மேலோங்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts