இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் முக்கிய அறிவிப்பு!

மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளில் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “மே-18 தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளாகும்.

தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்ததோடு மட்டுமல்லாமல் எமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசாங்கத்தின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.

எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை திட்டமிட்டு அழித்த அரசாங்கம் எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழிவிட்டது.

இப்போது, வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு வந்து அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் தூபியை மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுகூரலையும் வஞ்சகமாகத் தடுக்க முனைந்துள்ளது.

மேலும், கொரோனாவைக் காரணம் காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுக முடியாதபடி தடுத்துள்ளது. இவர்களது, இழிச் செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்.

ஆகவே, மக்கள் இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள், எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி மாலை ஆறு மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம்.

இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்து உண்போம். அந்த வேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப் படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம்.

நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழித்துவிட முடியாது என்பதை உரத்துச் சொல்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts