இழந்த அதிகாரங்களை பெறுவதற்கு சுயநலவாதிகள் சதி: சம்பந்தன் குற்றச்சாட்டு

இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

மீதொட்டமுல்ல பாதிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான சுயலாப அரசியல் நோக்கங்களினால் நாடு மீதொட்டமுல்ல அனர்த்தம் போன்ற பல்வேறு அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அதிகாரிகளின் செயற்திறனற்ற நடவடிக்கைகளினாலேயே மீதொட்டவில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக சாடிய அவர், அங்கு ஆபத்து உள்ளது என ஏற்கனவே அறிந்திருந்த போதிலும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

நாட்டில் போட்டி நிறைந்த அரசியல் தலைத்தூக்கி உள்ளதால், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமான தேவைகளை அரசியல் தலையீடின்றி முன்னெடுக்க எவரும் முனவருவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுய அரசியல் இலாபத்திற்காக மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related Posts