துண்டாடுவதற்கு இலங்கை ஏனைய நாடுகளைப் போன்று விசாலமான நாடல்ல. இலங்கை ஒரு சிறிய நாடு என்பதைச் சகலரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சுயநல அரசியல் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இடமளிக்காமல் சகல மக்களும் ஒன்றாக இணைந்து வாழும் நாடாக இந்த நாடு கட்டியெழுப்பப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
வடக்கிற்கே தற்போது அதிக நிதி செலவிடப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கின் பாரிய அபிவிருத்தியோ மக்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களோ எவரது அழுத்தங்களின் பேரிலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சகல உரிமையும் பெற்று ஜனநாயக ரீதியில் சகல மக்களும் வாழவேண்டும் என்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே அவை எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை தவறான வழியில் நடத்தி ஏமாற்ற நினைப்போரை நம்பக்கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையோரின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்கின்றனர் எனவும் அவர்களது சொத்துக்கள் குடும்பங்கள் அனைத்துமே கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் உள்ளன எனவும் தெரிவித்தார்.
இத்தகையோர் குறுகிய அரசியலைக் கைவிட்டு பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயற்பட வேண்டியது முக்கியம் எனவும் தெரிவித்தார்.
வன்செயல் நடவடிக்கை காரணமாக பாதிப்படைந்த வட மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இந்நிகழ்வில் தமக்கான நட்டஈடுகளை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர். 90 மில்லியன் ரூபா இவர்களுக்கு நட்ட ஈடாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஏ. எச். எம். பெளஸி, திஸ்ஸவிதாரண, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட அமைச்சின் செயலாளர்கள், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அரச அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற வன்செயல்களில் மரணமடைந்தோர் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தவர்களுக்காகவே இந்த நட்டஈடு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,
வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
எனினும் ஒருவரது இழப்பு பணத்தினால் ஈடு செய்ய முடியாதது. அதனை மறுக்கவும் முடியாது. எனினும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலம் வளமானதாக வேண்டும். அவர்கள் வாழ்வில் சிறந்த முன்னேற்ற மடைந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்பவர்களாக மாறவேண்டும் என்பதே எமது நோக்கம்.
உலகில் பல நாடுகளில் யுத்தம், வன்முறை நடந்துள்ளபோதும் குறுகிய காலத்தில் அப்பிரதேசங்களைக் கட்டியெழுப்பி இது போன்ற நிவாரணங்களை வழங்குவது இலங்கை தான் என பெருமையுடன் கூற முடியும்.
வடக்கு கிழக்கு மக்கள் கடந்த மூன்று தசாப்த காலம் பட்ட துன்ப துயரங்கள் கஷ்டங்களை நாம் அறிவோம். இனியும் அவ்வாறு இருள் சூழ்ந்த யுகம் இந்த நாட்டில் இல்லை. வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றி முழு நாடும் இந்த துயர அனுபவங்களைச் சந்தித்துள்ளன.
வடபகுதி மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் சூழலை எம்மால் ஏற்படுத்த முடிந்துள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்பி மக்கள் சந்தேகமின்றி பாதுகாப்பாக வாழ வழி செய்துள்ளோம்.
இலட்சக் கணக்கில் மிதிவெடிகளை அகற்றியுள்ளோம். கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீடு, வீதி என பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம். கூடுதல் நிதி வடக்கிற்கே செலவிடப்படுகிறது. இதை எந்த அழுத்தத்தின் பேரிலும் நாம் மேற்கொள்ளவில்லை. உடைந்த உள்ளங்களை ஒன்றிணைக்கவும் இழந்த உரிமைகளை மீளப் பெற்றுக் கொடுக்கவுமே நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
மனித மனங்கள் வென்றெடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் 99 வீதமானோரை சமூகமயப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டைத் துண்டாட முடியாது இது அயல் நாடுகளைப் போன்று விசாலமான நாடு அல்ல. சிறிய நாடு, எல்லாப் பிரதேசங்களிலும் உறவுகள் வாழ்கின்றன. சகலரும் ஒன்றாக வாழக்கூடிய நாடாகவே இந்த நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும்
குறுகிய அரசியலை விடுத்து சகலரும் சமாதானமாக சமத்துவமாக ஒரே நாட்டில் வாழவேண்டும். தவறான வழிகளில் வழி நடத்துவோரிடம் ஏமாறாமல் உங்கள் எதிர்காலம், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிந்தித்து அனைத்து மக்களுடனும் இணைந்து ஒரே தாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது. அதுவே எமது நோக்கமும் தேவையுமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.