இளையராஜா, இசையின் ராஜா…!

இந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் தடுத்து நிறுத்தியவர் இளையராஜா! தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில், ராமசாமி – – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இயற்பெயர் ராசய்யா. தன் சகோதரர்களுடன் இசைக்குழு நடத்தினார். 1976ல், அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த, 1993ல், லண்டன் ராயல் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றார். இசைஞானி இளையராஜா பிறந்த தினம் இன்று! இதைமுன்னிட்டு அவரைப்பற்றிய கட்டுரையே இந்த செய்தி…

raja-ilaya-

1004 படங்கள், ஒரு படத்திற்கு சராசரியாக 5 பாடல்கள் என்றாலும் 5000 பாடல்கள், அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள், கவிஞர்கள், அந்தப் பாடல்களைப் பாடிய பாடகர்கள், பாடகிகள், அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசைக் கலைஞர்கள், அந்தப் பாடல்களைப் படமாக்கிய இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், நடன இயக்குனர்கள், நடனக் கலைஞர்கள், கலை இயக்குனர்கள், ஆடை அலங்காரக் கலைஞர்கள், என எண்ணற்ற கலைஞர்கள் பணிபுரிந்தாலும் அந்தப் பாடல்கள் நம்மை தினம் தினம் ரசிக்க வைக்கக் காரணமாக இருக்கும் ஒரே ஒருவர் இளையராஜா.

ஒரு பாடலுக்கு இசை தான் மையம், அந்த இசையைச் சுற்றித்தான் அனைத்துமே இயங்குகின்றன. சொல்லப் போனால் சூரியனைச் சுற்றும் கிரகங்களைப் போல, இசையைச் சுற்றித்தான் ஒரு பாடல் பிறக்கிறது, தவழ்கிறது, தாலாட்டுகிறது, மெய் மறக்க வைக்கிறது. இளையராஜாவின் இசையை மட்டுமே ரசிப்பதற்கென்று பாடல் வரிகள் இல்லாத இன்ஸ்ட்ருமென்ட்ல் இசை மட்டும் இன்றைய இளைய இசை ரசிகர்கள் கூட்டம் தேடிக் கொண்டிருக்கிறது.

இளையராஜாவே அதிகாரப்பூர்வமாக அப்படி ஒரு இசையை மட்டும் வெளியிட்டால் ஹௌ டூ நேம் இட், போல நத்திங் பட் வின்ட் போல அனைத்துப் பாடல்களும் இன்ஸ்ட்ருமென்டல் இசையாக மட்டுமே வெளிவந்தால் இசையார்வம் மிக்க அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

இன்று நடிக்க வரும் நடிகர்களுக்கும் சிவாஜிகணேசனின் தாக்கமோ, எம்ஜிஆரின் தாக்கமோ, ரஜினிகாந்தின் தாக்கமோ, கமல்ஹாசனின் தாக்கமோ இருக்கும் என்பார்கள். ஆனால், இசையைப் பொறுத்தவரையில் இளையராஜா இசையின் தாக்கம் இல்லாமல் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் யாருமே இருக்க முடியாது.

இப்போது முன்னணியில் இருக்கும் சில இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் ரசிகர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் அவர்களுடைய பல பாடல்களில் எங்கேயோ கேட்ட இளையராஜாவின் இசை ஆகவே இருக்கும். அதை அவர்களும் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

மொழி கடந்து, மாநிலம் கடந்து உலக மக்களுக்கான பொது மொழியாக இருப்பது இசை மட்டுமே. இசையே ஒரு மொழிதான், அதன் மூலம் எத்தனையோ விதமான உணர்வுகளைப் புரிய வைக்க முடியும். மௌனமும் ஒரு வித மொழிதான், அந்த மௌனத்தைக் கூட தன்னுடைய இசையில் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத உணர்வுகளைக் கூடப் புரிய வைத்தவர் இளையராஜா.

சில பாடல்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒரே டியூனைப் பயன்படுத்தியிருப்பார். மற்ற மொழி தெரியாத மக்கள் கூட அந்தப் பாடல்களை தேடித் தேடி ரசிப்பார்கள். தமிழில் மட்டுமா ராஜாவுக்கு ரசிகர்கள், மற்ற மொழிகளில் கூட அவரைப் பாராட்டாத இயக்குனர்கள் இல்லை, நடிகர்கள் இல்லை.

மலையாளத்திலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் இன்னமும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று அவரைத் தேடி வந்து இசையமைக்க வைக்கிறார்கள்.

இளையராஜாவின் இனிமையான பாடல்கள் இல்லையென்றால் டிவிக்களும், இசை சேனல்களும், எஃப்எம்-களும் எதை ஒளி,ஒலிபரப்புவார்கள் என பல முறை பலருக்கும் கேள்விகள் எழுந்திருக்கும். இசைப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் பாடப்பட்ட பாடல்களைப் பார்த்தால் அவற்றில் இளையராஜாவின் பாடல்கள் மட்டுமே அதிகமாகப் பாடப்பட்டிருக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக என்னென்னமோ மாற்றங்கள் வந்தாலும் அவற்றில் 90 சதவீதம் இளையராஜாவின் பாடல்களும் இருக்கும். காலர் டியூன், பாடல்கள் டவுன்லோட், யு டியூப், இசை இணையதளங்கள் என எத்தனை விதமான வடிவங்களில் இளையராஜாவின் இசை விரவிக் கிடக்கிறது. யு டியூபில் அதிகாரப்பூர்வமில்லாத கணக்குகளில் பல லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்த இளையராஜாவின் பாடல்கள் உள்ளது.

இளையராஜா இசையமைத்த 5000 பாடல்கள் இதுவரை எத்தனை கோடி பேரால், எத்தனை கோடி முறை கேட்கப்பட்டது, பார்க்கப்பட்டது என்று கணக்குப் பார்த்தால் கால்குலேட்டரில் கூட கணக்கிட முடியாது.

பல கஷ்ட, நஷ்டங்களையும் மறக்கச் செய்யும் மகிமை இளையராஜாவின் இசைக்கு உண்டு என்று தனிமையில் அவரது பாடல்களை ரசிப்பவர்களும், நீண்ட தூர சாலை, ரயில் பயணங்களில் அவருடைய பாடல்களை மட்டுமே கேட்டு ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இளையராஜாவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என இசையுலகத்தில் மாற்றம் ஏற்பட்டது என்பது நிதர்சன உண்மை.

இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

Related Posts