இளையராஜாவைப் பேட்டி எடுத்த கெளதம் மேனன்!

இளையராஜாவின் 1000 பட சாதனையை முன்னிட்டு இந்த மாதம் 27-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளது விஜய் டிவி. அதற்காக இளையராஜாவைப் பேட்டி கண்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி விஜய் டிவிக்குப் பேட்டி அளித்தார் இளையராஜா.

இதன் அடுத்தக் கட்டமாக இளையராஜா 1000 என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த முன்வந்துள்ளது விஜய் டிவி. பிப்ரவரி 27-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கான விளம்பரங்கள் விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இதற்கான ஒரு நிகழ்ச்சிக்காக, இயக்குநர் கெளதம் மேனன், இளையராஜாவைப் பேட்டியெடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இந்தப் பேட்டி நடைபெற்றது.இதுபற்றி கெளதம் மேனன், தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

ராஜாவுடன் பேசியபோது எடுத்த படம். ராஜா சார் பேசினார். நான் கேட்டுக்கொண்டேன். அவர் பாடியபோது மீண்டும் அந்த மேஜிக் நிகழ்ந்தது என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி, வருகிற சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Related Posts